சென்னை: தமிழக அமைச்சர் நேருவின் குடும்ப நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையால் அரசியல் களத்தில் பரபரப்பு நிலவுகிறது.
சென்னையில் ஆழ்வார்பேட்டை, பெசன்ட் நகர் உள்ளிட்ட 10 இடங்களில் தனியார் கட்டுமான நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் திங்கட்கிழமை காலை இந்தச் சோதனை நடைபெற்றதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கோயம்புத்தூரில் சில இடங்களிலும் சோதனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. சில இடங்களில் இரவு வரை சோதனை நீடித்ததாகவும் தெரிகிறது.
ஆழ்வார்பேட்டையில் அமைச்சர் கே.என். நேருவின் மகனும், பெரம்பலூர் தொகுதி எம்பியுமான அருணுக்கு சொந்தமான நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று காலை வந்த அதிகாரிகள் உடனடியாக சோதனையைத் தொடங்கினர்.
இதேபோல் திருச்சி தில்லைநகரில் அமைச்சர் நேருவின் மகன் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் நீர் வழங்கல் துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கிறார் கே.என்.நேரு. இவரது சகோதரர் ரவிச்சந்திரன் டிவிஹெச் என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
ரவிச்சந்திரனின் கட்டுமான நிறுவனங்கள், அவருக்கு தொடர்பான இடங்களைக் குறிவைத்து அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
சென்னையில் டிவிஹெச் (TVH) குழும கட்டுமான நிறுவனங்களுடன் தொடர்புடைய ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
ரவிச்சந்திரன் தொடர்புடைய அடையாறு, தேனாம்பேட்டை, சிஐடி காலனி, எம்ஆர்சி நகர் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது கைப்பற்றப்பட்ட பொருள்கள் குறித்து எந்தவித தகவலையும் அதிகாரிகள் வெளியிடவில்லை.
தொடர்புடைய செய்திகள்
எனினும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனவே சோதனையின் இறுதியிலேயே முழு விவரங்கள், முக்கிய ஆவணங்கள் ஏதேனும் பறிமுதல் செய்யப்பட்டதா என்பது தெரியவரும்.
தமிழக அமைச்சர்கள், அவர்களுக்கு நெருக்கமானவர்களுடன் தொடர்புடைய இடங்களில் மத்திய அமலாக்கத்துறையினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது ஆளும் திமுக வட்டாரங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசின் சில முடிவுகளை தமிழக அரசு திட்டவட்டமாக எதிர்ப்பதால் பாஜக பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுவதாக திமுக தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் பாஜக இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
டாஸ்மாக் முறைகேடு, அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரங்களில் தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையின்போது பல்வேறு ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக பாஜக தலைவர்கள் கூறியுள்ளனர்.