தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

2 mins read
7fbeab79-30f6-438b-a997-4e08faa04f66
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் இல்லாததால் அமலாக்கத் துறை அதிகாரிகள் அவருக்காகக் காத்திருந்தனர். - படம்: ஊடகம்

வேலூர்: தமிழக நீர்வளம், கனிமவளத் துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட அதிரடிச் சோதனை நடவடிக்கை காரணமாக, திமுக வட்டாரங்களில் பரபரப்பு நிலவியது.

மூத்த அமைச்சரான துரைமுருகனின் வீடு வேலூர், காட்பாடி நகரில் உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினராக அவரது மகன் கதிர் ஆனந்தும் இதே வீட்டில்தான் வசிக்கிறார்.

இந்நிலையில், அமைச்சர் துரைமுருகனின் வீடு, மகன் கதிர் ஆனந்துக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகம், அமைச்சருக்கு நெருக்கமான திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன், அவரது உறவினர் வீடுகள் என நான்கு இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, வேலூர் தொகுதியில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது அவர் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்ததாக எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பின.

இதையடுத்து, துரைமுருகன் வீட்டிலும் கதிர் ஆனந்துக்குச் சொந்தமான கல்லூரியிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியபோது, ரூ.10.57 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர், கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி, பூஞ்சோலை சீனிவாசனின் வீடு உள்ளிட்ட ஆறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது ரூ.11.51 கோடி பணம் சிக்கியது.

இதையடுத்து, வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக அவர் மீதும் கதிர் ஆனந்தன் உள்ளிட்டோர் மீதும் வழக்குப் பதிவானது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை (டிசம்பர் 3ஆம் தேதி), அமலாக்கத் துறையினர் மீண்டும் அமைச்சர் துரைமுருகன் வீடு உள்ளிட்ட நான்கு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

சட்டவிரோத மணல் குவாரிகள் விவகாரம் தொடர்பாகவும் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்