சென்னை: முன்னாள் நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கை காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.
அவரது கணவர் மோகன் குப்தா நடத்தி வரும் நிறுவனத்தில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் அருணா. கடந்த 1980களில் தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த அருணா, இயக்குநர் பாரதிராஜாவின் ‘கள்ளுக்குள் ஈரம்’ படத்தின் மூலம் நாயகியாக திரையுலகில் அறிமுகமானார்.
அதன் பின்னர், ‘சிவப்பு மல்லி’, ‘நாடோடி ராஜா’, ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ உட்பட பல தமிழ்ப் படங்களில் நடித்த அவருக்கு, தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் பல வாய்ப்புகள் கிடைத்தன.
தொழிலதிபரான மோகன் குப்தா என்பவரைத் திருமணம் செய்துகொண்டு திரையுலகைவிட்டு விலகிய அருணா, குடும்பத்துடன் சென்னை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் வசித்து வருகிறார். வீடுகளுக்கு உள் அலங்காரப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தை நடத்தி வருகிறார் மோகன் குப்தா.
இந்நிலையில், மோகன் குப்தாவின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர்.
புதன்கிழமை (ஜூலை 9) காலை சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு வந்த ஐந்து அதிகாரிகள், காலை 7 மணியளவில் சோதனையைத் தொடங்கினர். பல மணி நேரம் நீடித்த சோதனையின் முடிவில் என்னென்ன ஆவணங்கள், ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன என்பது தெரியவில்லை.
மேலும், மோகன் குப்தாவிடம் விரிவான விசாரணை நடத்தப்படுமா என்பது குறித்து அமலாக்கத்துறை தரப்பில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
தொடர்புடைய செய்திகள்
சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை மட்டுமே அமலாக்கத்துறை சோதனைக்கு காரணமா என்பது தெரியாத நிலையில், மூத்த நடிகையின் வீட்டில் நடந்துள்ள இச்சம்பவம் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.