புதுடெல்லி: ரேகா குப்தா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வரும் டெல்லியில், ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் வீடு உட்பட 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆம் ஆத்மி ஆட்சியில் மருத்துவமனை கட்டுமானப் பணிகளின்போது சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாகக் கூறி அமலாக்கத்துறை இந்தச் சோதனை நடவடிக்கையை நடத்தியுள்ளது.
ஒரே நேரத்தில் 13 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டும், சோதனைகளின்போது கைப்பற்றப்பட்ட ரொக்கம், ஆவணங்கள் குறித்து அமலாக்கத்துறை எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
சவுரவ் பரத்வாஜ் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தவர். அத்துடன் அவர், டெல்லி சுகாதாரம், நகர்ப்புற மேம்பாடு மற்றும் நீர்வளத்துறை அமைச்சராகவும், டெல்லி நீர் வாரியத் துறை தலைவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2018 -2019 காலகட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி ரூ.5,590 கோடி மதிப்பீட்டில், 24 மருத்துவமனைகள் கட்டுவதற்கும் மேம்படுத்தவும் ஒப்புதல் வழங்கியதில் ஊழல் நடைபெற்றதாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்திர குப்தா குற்றம் சாட்டினார்.
அந்தப் புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் பரத்வாஜ், சத்யேந்திர ஜெயினுக்கு எதிராக ஊழல் தடுப்பு ஆணையம் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்நிலையில், இந்தப் புகாரை விசாரித்த அமலாக்கத் துறை, அந்தப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. சிலவற்றில் மதிப்பீட்டை விட அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 26), ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இது குறித்துப் பேசிய டெல்லி முன்னாள் முதல்வர் அதிஷி, “இந்தச் சோதனை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடத்தப்பட்டது,” எனக் கூறியுள்ளார். “சவுரவ் வீடு, அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது ஏன் தெரியுமா? பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப் படிப்புச் சான்றிதழ் தொடர்பாகக் கேள்வி எழுப்பப்படுவதால், அதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப இந்தச் சோதனை நடத்தப்படுகிறது,” என்று கூறியுள்ளார்.
இதேபோல் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, “நேற்று ஒட்டுமொத்த நாடும் பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு பற்றி கேள்வி எழுப்பியது. அதிலிருந்து மக்களைத் திசை திருப்புவதற்கு மறுநாளே ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் வீட்டில் அமலாக்கத் துறை அதிரடிச் சோதனை நடத்தியுள்ளது,” என்றார்.