சென்னை: தமிழகத்தில் 18 இடங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடிச் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
திங்கட்கிழமை (ஜூன் 22) காலையில் தொடங்கிய இந்த நடவடிக்கை, மாலை வரை நீடித்தது.
சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட 18 இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தமிழக ஊடகங்கள் தெரிவித்தன.
கடந்த 2017ஆம் ஆண்டு அரசு பலதுறைத் தொழிற்கல்லூரியில் விரிவுரையாளர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
அதற்காகத் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், அத்தேர்தலில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. அதன்பேரில் மத்தியக் குற்றப்பிரிவுக் காவல்துறை 156 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்ததாகக் கூறி அமலாக்கத்துறையும் பதிவு செய்தது. அந்த வழக்கின் அடிப்படையிலேயே செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) தமிழகம் முழுவதும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
சில கல்வி நிறுவனங்களிலும், சில கல்வித்துறை அதிகாரிகளின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

