விஐடி சென்னையில் கடந்த வியாழக்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவுக்கு விஐடி பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் வேந்தருமான முனைவர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். விஐடியின் துணைத் தலைவர் முனைவர் ஜி.வி.செல்வம் முன்னிலை வகித்தார்.
இவ்விழாவில் திரைப்பட நடிகர் ராமராஜன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். விழாவில் பங்கேற்ற விருந்தினர்களுக்குப் பரிவட்டம் கட்டி கரும்பு வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
விருந்தினர்கள் முன்னிலையில் பொங்கல் பானையில் பொங்கல் வைக்கப்பட்டது. அப்போது அனைவரும் “பொங்கலோ பொங்கல்” என்று மகிழ்ச்சி பொங்க முழங்கினர்.
நாட்டுப்புறக் கலைஞர்களால் தேவராட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் அரகேற்றப்பட்டது. மேலும், பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் மற்றும் ஜல்லிக்கட்டு காளை மாடு உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டன.
இதைத் தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடந்தது. சிற்றூர்களில் பொங்கல் கொண்டாடப்படுவதை நினைவுகூரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
விழாவில், உரையாற்றிய விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன், “உலகம் முழுவதும் 160 நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். சாதி, மதம், கட்சி, மாநிலம் என்று எதுவும் பாராமல் பொங்கல் திருநாளை அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
சிறப்பு விருந்தினர் நடிகர் ராமராஜன் பேசுகையில், “விஐடி சென்னையில் நடந்த பொங்கல் விழா பழைய நினைவுகளை நினைவுகூரும் வகையில் சிறப்பாக அமைந்தது. என்னைப் பொறுத்தவரையில் எத்தனை திரைப்படங்களில் நடித்துள்ளோம் என்பது முக்கியமில்லை. எத்தனை பேர் மனத்தில் இடம் பிடித்துள்ளோம் என்பதுதான் முக்கியம். திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல கருத்துக்களைப் பரப்ப வேண்டும். அதன் மூலம், சமத்துவ சமுதாயம் உருவாக வேண்டும். மாணவர்கள் படித்து முடித்து வேலைக்குச் சென்ற பிறகு, தங்களுடைய பெற்றோரைப் பேண வேண்டும்,” என்றார்.
நிகழ்ச்சியில், விஐடி சென்னையின் இணை துணை வேந்தர் டி.தியாகராஜன், இயக்குநர் சத்யநாராயணன், கூடுதல் பதிவாளர் முனைவர் பி.கே.மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

