தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
வேட்புமனுத் தாக்கலுக்கு 3 நாள்களே

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சியில் பாஜக

2 mins read
d47c08de-ea45-47f1-b80d-9a54425f16d8
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடப்புக்கு வந்துள்ளன. இதன்படி, ஈரோடு மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் அறைகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன. - படம்: இந்திய ஊடகம்

ஈரோடு:  ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. இதற்கு அதிமுக சம்மதிக்கும் பட்சத்தில், தமாகா சார்பில் பொது வேட்பாளரைக் களம் இறக்குவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து, பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து வேட்பாளர்களைக் களமிறக்குவதில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

இதுகுறித்து வரும் 11ஆம் தேதி மாவட்ட செயலாளர்களைக் கூட்டி, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். என்டிஏ கூட்டணி சார்பில் வேட்பாளரை நிறுத்துவது குறித்து, பாஜக தலைவர் அண்ணாமலை ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக டெல்லி தலைமை தற்போது விரும்புகிறது. அதற்கு ஏற்ப, அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் அண்மைய செயல்பாடுகள் அமைந்துள்ளன.

அதிமுகவுடன் இணக்கமாகச் செல்ல, அண்ணாமலை தரப்பில் ஈடுபாடு காட்டப்பட்டாலும் அதிமுக தரப்பில் இதுவரை அது ஏற்கப்படவில்லை.

இந்த இடைத்தேர்தலை மையமாக வைத்து, பாஜக கூட்டணியில் அதிமுகவை இணைக்க முயற்சிகள் தொடங்கியுள்ளன. அதற்கான முதற்படியாக, இண்டியா கூட்டணி வேட்பாளரை எதிர்த்து, பொது வேட்பாளரை நிறுத்த முயற்சிகள் நடக்கின்றன.

இத்தொகுதியில் இண்டியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், திமுகவின் முன்னணி பிரமுகர்களும் தொகுதியை தங்கள் கட்சிக்கு ஒதுக்க சில முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

வேட்புமனுத் தாக்கலுக்கு மூன்று நாள்கள்

ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் பண்டிகை, விடுமுறை நாள்கள் தவிர்த்து, ஜனவரி 10, 13, 17 ஆகிய 3 நாள்கள் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

தேர்தல் சோதனை பணிக்காக மூன்று பறக்கும் படை, மூன்று நிலை கண்காணிப்புக் குழு, தலா ஒரு வீடியோ, தணிக்கை குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினர் சுழற்சி முறையில் சோதனை மேற்கொள்வர் என்றும் அவர் தெரிவித்தார்.

“உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாகவோ, பரிசுப்பொருட்களை மொத்தமாகவோ எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும். வாக்காளர்கள், தங்களது பெயர், வேட்பாளர் பட்டியலில் உள்ளதா என சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.

“ஈரோடு கிழக்குத் தொகுதியில் விதிமுறைகளின்படி, சுவர் விளம்பரம், அரசியல் கட்சி கொடிக் கம்பங்கள் அகற்றப்படும். அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் ஊடகங்கள் உள்ளிட்டவற்றில் விளம்பரம் செய்வதற்கு முன்பு தணிக்கை சான்று பெறுவது அவசியம்,” என்றும் அவர் கூறினார்.

பிப்ரவரி 8ஆம் தேதி சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரி வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும்.

பதற்றமான வாக்குசாவடிகளைக் கண்டறிந்த பின்பு, தேவையின் அடிப்படையில், மத்திய ஆயுதப்படை காவல்துறையினரின் பாதுகாப்பு கோரப்படும் என்றும் ராஜ கோபால் சுன்கரா கூறினார்.

குறிப்புச் சொற்கள்