தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: திமுக, நாம் தமிழர் கட்சி இடையே போட்டி

2 mins read
37a42bd5-f69a-4af6-ac5f-c90109100ed6
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சீதாலட்சுமி வேட்புமனுத் தாக்கல் செய்தார். - படம்: தமிழக ஊடகம்
multi-img1 of 2

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி இருவரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.

கடந்த 2011 தேர்தலில் தேமுதிக வேட்பாளராக ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட சந்திரகுமார், தற்போதைய திமுக அமைச்சராக இருக்கும் முத்துசாமியை வீழ்த்தினார்.

தற்போது திமுகவில் இணைந்து, கட்சியின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளராக இருக்கும் சந்திரகுமார், ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமியை எதிர்த்து போட்டியிடுகிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி 5ஆம் தேதி, ஈரோடு கிழக்கில் இரண்டாவது முறையாக இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

கடந்த 2021, 2023 தேர்தல்களில் அத்தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், இம்முறை ஆளும் திமுகவே களம் காண்கிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கலுக்கு இறுதி நாளான வெள்ளிக்கிழமையன்று மாலை வரை 59 வேட்பாளர்கள் 65 வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். சனிக்கிழமை (ஜனவரி 18) வேட்பு மனுக்கள் பரிசீலனை, ஜனவரி 20 அன்று வேட்பு மனுவைத் திரும்பப் பெற கடைசி நாள்.

அதிமுக, தேமுதிகவைத் தொடர்ந்து பாஜகவும் இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக்கழகமும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இருந்து விலகுவதாக வெள்ளிக்கிழமை காலை அறிவித்தது. எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்பதையும் அக்கட்சி அறிவித்துள்ளது.

இதனால், ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவும் நாம் தமிழர் கட்சியும்தான் போட்டியிடவுள்ளன.

குறிப்புச் சொற்கள்