சென்னை: முதலமைச்சர் புத்தாய்வுத் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்றவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) நடந்தது. இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பயிற்சி முடித்தவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கினார்.
அப்போது, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பாடிய அரசு பெண் ஊழியர்கள் ‘கண்டமிதில்’ என்பதற்குப் பதிலாக ‘கண்டமதில்’ எனப் பாடினர்.
இதைக் கவனித்த துணை முதலமைச்சர் அதை மீண்டும் பாடும்படி அதிகாரிகளிடம் சொன்னார். அதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து மீண்டும் பாடப்பட்டது. அப்போது பாடல் வரியில் ‘புகழ்’ மணக்க என்பதை ‘திகழ்’ மணக்க என்று மீண்டும் பிழையுடன் பாடினர்.
இதனால், கோபமடைந்த திரு உதயநிதி ஸ்டாலின், அதிகாரிகளை முறைத்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், நிகழ்ச்சி முடிந்ததும் செய்தியாளர் சந்திப்பிற்கு அவர் சென்றார்.
அப்போது இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். “தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பிழையாகப் பாடப்படவில்லை. ஒலிவாங்கி சரியாக வேலை செய்யவில்லை. இரண்டு மூன்று இடங்களில் ஊழியர்கள் பாடும்போது குரல் கேட்கவில்லை,” எனப் பதிலளித்தார்.
மேலும், தேவையின்றி மீண்டும் பிரச்சினையைக் கிளப்பிவிடாதீர்கள் எனச் செய்தியாளர்களை உதயநிதி கேட்டுக்கொண்டார்.