சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்நிலையில், அக்கட்சியின் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை ராமதாஸ் நாடியுள்ளார்.
2025ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் சேலத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பாமகவின் தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டார்.
மேலும், தேர்தல் நேரங்களில் கூட்டணியை முடிவு செய்யவும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யவும் ராமதாசுக்கு முழு அதிகாரம் வழங்கத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனிடையே, ஆவணங்களின் அடிப்படையில் அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் ஆதரவாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அதனை எதிர்த்து ராமதாஸ் புதுடெல்லி உயர்நீதிமன்றத்தை நாடிய நிலையில், இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தை நாடும்படி அவருக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
அதன்படி, பாமக தங்களுக்கே சொந்தம், கட்சியில் தனக்கே முழு அதிகாரம் ஆகியவற்றை வலியுறுத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை ராமதாஸ் தொடுத்துள்ளார்.
மற்றொரு மனுவில், பாமகவின் பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த அன்புமணி உள்ளிட்டோருக்குத் தடை விதிக்க வேண்டும் போன்றவை குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், தேர்தல், கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க ராமதாசுக்கு மட்டுமே அதிகாரம் என உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இந்த வழக்கு ஓரிரு நாள்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாமக இரண்டாகப் பிளவுபட்டு கட்சியின் நிர்வாகிகள் ராமதாஸ், அன்புமணி என இரு தரப்பாகப் பிரிந்துள்ள நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அன்புமணி தரப்பு இணைந்துள்ளது.

