சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவெடுத்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் ஒரே நாளில் மூடிவிட இயலும் என மதுவிலக்கு, ஆயத்தீர்வை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
எனினும் முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் இது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் அவ்வாறு முடிவெடுத்தால் அதைச் செயல்படுத்தும் முழுமையான அதிகாரம் அவருக்கு உண்டு என்றும் செய்தியாளர்களிடம் முத்துசாமி குறிப்பிட்டார்.
எனினும், மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்தினால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது அனைவருக்கும் நன்கு தெரியும் என்றார் அமைச்சர் முத்துசாமி.
தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த அரசு திட்டமிட்டு வருவதாக ஒரு தகவல் வலம்வருகிறது.
இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, நீண்டகால நடவடிக்கையாக மதுக்கடைகளைப் படிப்படியாக மூடும் எண்ணம் அரசுக்கு உள்ளதாக அமைச்சர் கூறினார்.
“மதுவுக்கு எதிரான விடுதலை சிறுத்தை கட்சியின் மாநாட்டுக்கு முன்னர், டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் திட்டம் ஏதுமில்லை.
“அவர்கள் கொள்கை ரீதியாக மாநாடு நடத்துகிறார்கள். அதில் தவறு காண முடியாது. அவர்கள் முதல்வருக்கு எதிராகச் செயல்படவில்லை.
“முதல்வர் நினைத்தால் ஒரே நாளில் உத்தரவு பிறப்பித்து மதுக்கடைகளை மூடிவிடலாம். மதுக்கடைகளை நடத்துவதில் முதல்வருக்கு அறவே விருப்பமில்லை. என்றாவது ஒரு நாள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என்பதுதான் முதல்வரின் எண்ணம்.
தொடர்புடைய செய்திகள்
“அனைத்து மதுக்கடைகளையும் மூடிவிட்டால் வேறு விதமான வழிகளில் தவறுகள் நடக்க வாய்ப்புண்டு. எனவேதான் அரசு நிதானமான அணுகுமுறையைக் கையாள்கிறது,” என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
இதற்கிடையே, மதுக்கடைகளை என்றாவது மூட வேண்டும் என்ற எண்ணம் முதல்வருக்கு இருப்பது ஆறுதல் அளிப்பதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

