கோவை: மேட்டுப்பாளையத்தில் மாற்றுச் சமூகப்பெண்ணை காதல் திருமணம் செய்த இளைய சகோதரரையும் அவரது மனைவியையும் வெட்டிக் கொன்ற வழக்கில், அண்ணனுக்குத் தூக்கு தண்டனை விதித்து கோவை பட்டியலின மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
சீரங்கராயன் ஓடைப் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கனகராஜ், அதே பகுதியில் வசித்து வந்த வர்ஷினி பிரியா என்பவரைக் காதலித்து வந்தார். வர்ஷினி என்பவர் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், கனகராஜின் அண்ணன் வினோத்குமார் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தார்.
இருப்பினும், அண்ணனின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் கனகராஜ், வர்ஷினி பிரியாவைத் திருமணம் செய்துகொண்டார்.
இருவரும் அதே ஊரில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். தனது எதிர்ப்பையும் மீறி இருவரும் திருமணம் செய்ததால், வினோத்குமார் கோபமடைந்தார். 2019 ஜூன் 25 ஆம் தேதி, வினோத் குமார் அரிவாளுடன் தம்பி கனகராஜ் வீட்டிற்குச் சென்று அங்கிருந்த கனகராஜையும் அவருடைய மனைவி வர்ஷினி பிரியாவையும் சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டுத் தலைமறைவானார்.
வெட்டுப்பட்ட தம்பதியரில் கனகராஜ் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார். வர்ஷினி மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக வர்ஷினிபிரியாவின் தாயார் அமுதா அளித்த புகாரின் பேரில் கூட்டுச்சதி, கொலை, எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், அத்துமீறி நுழைதல் ஆகிய பிரிவுகளின் கீழ் மேட்டுப்பாளையம் காவல்துறையினர், வினோத்குமார், அவருக்கு உடந்தையாக இருந்ததாக சின்னராஜ், கந்தவேல், ஐயப்பன் ஆகிய நால்வர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கு விசாரணை கோயம்புத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள, பட்டியலின மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற அமர்வில் நீதிபதி விவேகானந்தன் வழக்கை விசாரித்தார்.
ஜனவரி 23ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், சகோதரரையும் அவருடைய மனைவியையும் படுகொலை செய்த அண்ணன் வினோத்குமார் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இந்த வழக்குத் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட சின்னராஜ், கந்தவேல், ஐயப்பன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் குற்றவாளிக்குத் தண்டனை பற்றிய விவரத்தை நீதிமன்றம் 29 ஆம் தேதி (புதன்கிழமை) அறிவித்தது.
அதில், கனகராஜையும் வர்ஷினியையும் படுகொலை செய்த வினோத்குமாருக்குத் தூக்குத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். தொடர்ந்து வினோத்குமார் காவல்துறையினரின் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

