சென்னை: கத்திக் குத்துக்கு ஆளான மருத்துவர் பாலாஜி மீது குற்றம்சாட்ட முயற்சிகள் நடைபெறுவதாக ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
“மருத்துவர் முறையாக சிகிச்சை வழங்கவில்லை, என்பது போன்ற கதைகளை உருவாக்க திமுக மற்றும் அதன் ஊடகங்கள் முயற்சிக்கின்றன. அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே, இதுபோன்ற கதைகளை உருவாக்க திமுக சார்பு ஊடகங்கள் முயற்சிக்கின்றன. அது தேவையற்றது, தவிர்க்கப்பட வேண்டும்,” என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னை கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனையில் தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரான ஹெச்.ராஜா வெள்ளிக்கிழமை (நவம்பர் 15) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, “இப்போது உயிர்காக்கும் மருத்துவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தான சூழ்நிலை தமிழகத்தில் உருவாகி இருக்கிறது. தாக்குதலுக்கு உள்ளான மருத்துவர் முறையாக சிகிச்சை வழங்கவில்லை, என்பது போன்ற கதைகளை உருவாக்க, திமுக மற்றும் ஊடகங்கள் முயற்சிக்கின்றன. அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நானும் மருத்துவமனைகளுக்குச் சென்றிருக்கிறேன். என் வியாதிக்கு என்ன மருந்து கொடுக்க வேண்டும் என்பது மருத்துவருக்குத்தான் தெரியும்.
“ஒரு சாதாரண காய்ச்சல் மாத்திரை பாராசிட்டமால், அது உடலில் எப்படி வேலை செய்கிறது என்று சொன்னால்தான் நான் அந்த மாத்திரையை எடுத்துக்கொள்வேன் என்று கூற முடியுமா? அவ்வாறு கூறுவது முறையல்ல. எனவே, இதுபோன்ற கதைகளை உருவாக்க திமுக சார்பு ஊடகங்கள் முயற்சிக்கின்றன. அது தேவையற்றது, தவிர்க்கப்பட வேண்டும். மருத்துவர் பாலாஜி விரைவில் குணம்பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்,” என்று ஹெச். ராஜா கூறினார்.

