உழவர்களுக்கு உதவ செயற்கை நுண்ணறிவுத் திட்டம்

உழவர்களுக்கு உதவ செயற்கை நுண்ணறிவுத் திட்டம்

படம்: இந்து தமிழ் திசை

06 Aug 2026 - 4:51 pm

1 mins read

சென்னை: உழவர்களுக்குத் தேவையான நவீன தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கும் ‘உழவர் செயற்கை நுண்ணறிவுத் திட்டம்’ தமிழ்நாட்டில் அறிமுகமாகிறது.

விதைப்பு முதல் அறுவடைவரை அனைத்துச் சேவைகளையும் எளிதாக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ), இயந்திரவழிக் கற்றல் நுட்பங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்படும் இத்திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

‘ஏஐ உழவர் செயலி’ மூலம் வானிலை முன்னறிவிப்பு, மண் நலம், பூச்சி, நோய் மேலாண்மை, பயிர் ஆலோசனை, சந்தை நிலவரம் ஆகியவற்றை விவசாயிகள் தங்களது கைப்பேசி வாயிலாகவும் குரல்வழிச் சேவைகள் மூலமாகவும் உடனுக்குடன் பெற முடியும்.

தமிழகச் சட்டமன்றத்தில் 2026-27 நிதியாண்டிற்கான வேளாண் வரவுசெலவுத் திட்டத்தை அமைச்சர் வினோத் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) தாக்கல் செய்தார்.

பயிறு வகைகள், எண்ணெய் வித்து உற்பத்தியில் அடுத்த ஐந்தாண்டுகளில் தன்னிறைவு அடையும் நோக்கில் ‘தன்னிறைவு இயக்கம்’ தொடங்கப்படுகிறது. இதற்காக மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் ரூ.203.64 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் உளுந்து, துவரை, பச்சைப்பயறு போன்ற பயறு வகைகளின் சாகுபடிப் பரப்பு 24.70 லட்சம் ஏக்கராகவும், நிலக்கடலை, எள், சூரியகாந்தி போன்ற எண்ணெய் வித்துகளின் சாகுபடிப் பரப்பு 14.89 லட்சம் ஏக்கராகவும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதன் மூலம் அவற்றின் உற்பத்தி இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
தமிழ்நாடுவேளாண்மைசட்டமன்றம்வரவுசெலவுத் திட்டம் 2026வரவுசெலவுத் திட்டம்விவசாயம்செயற்கை நுண்ணறிவுஏஐ