பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் பேரளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணசாமிக்கு, ரூ.1.70 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கியைச் செலுத்த உத்தரவிட்டு வணிக வரித்துறையிடம் இருந்து கடிதம் வந்துள்ளது.
அன்றாட விவசாயப் பணிகளை மேற்கொண்டு வரும் கிருஷ்ணசாமிக்கு, அண்மையில் வணிக வரித்துறையிடமிருந்து ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட கடிதம் ஒன்று அஞ்சலில் வந்துள்ளது.
ஆங்கிலம் படிக்கத் தெரியாத காரணத்தால், அவர் அக்கடிதத்தைத் தனது நண்பர்களிடம் கொடுத்துப் படித்துக்காட்டுமாறு கூறியுள்ளார். அதைப்படித்த நண்பர்கள் அதில் இருந்த விவரங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அதில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஸ்ரீரங்கபாளையம் கிராமத்தில் இரும்புக் கடை நடத்தி, பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்த வகையில் ரூ.1.70 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கி உள்ளது என்றும் அதனை உடனடியாகச் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதிர்ச்சியடைந்த விவசாயி கிருஷ்ணசாமி, உடனடியாகப் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில், தனது ஆதார் அட்டை, வங்கி ஆவணங்களைத் திருடிய மர்ம நபர்கள், அவற்றைப் பயன்படுத்திப் போலி நிறுவனம் தொடங்கி கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இந்த மோசடி குறித்து உரிய விசாரணை நடத்தித் தன்னைப் பாதுகாக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மனுவைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள், அதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகவும் மூன்று நாள்கள் கழித்து மீண்டும் வந்து சந்திக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
