கரூர்: தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் விவசாயி ஒருவர்மீது அடையாளம் தெரியாத நபர்கள் நாட்டுத் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கருணகிரி என்ற விவசாயி, கிருஷ்ணராயபுரம் பகுதிக்கு அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியே வந்த அடையாளம் தெரியாத சில நபர்கள், அவர்மீது திடீரென நாட்டுத் துப்பாக்கியால் சுட்டனர்.
அந்தத் தாக்குதலில் நிலைதடுமாறி விழுந்து படுகாயமடைந்த கருணகிரி, உடனடியாக அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையின் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
துப்பாக்கியிலிருந்து வெளியான தோட்டாக்கள், கருணகிரியின் உடலின் பத்து வெவ்வேறு இடங்களில் துளைத்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விவசாயிமீது தீய நோக்குடன் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலைமுயற்சியில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்துக் காவல்துறையினர் வழக்குத் தொடுத்துத் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


