சென்னை: நாம் தமிழர் கட்சிக்கு இந்தியத் தேர்தல் ஆணையம், விவசாயி சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இத்தகவலை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார்.
அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட விவசாயி சின்னத்தில் கரும்புக்கு பதிலாக ஏர் கலப்பை இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.
கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 8.22 விழுக்காடு வாக்குகளைப் பெற்று, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி என்ற மதிப்பைப் பெற்றது நாம் தமிழர் கட்சி.
இதையடுத்து, விவசாயி அல்லது புலி சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கக்கோரி நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்திடம் கோரியது.
எனினும், சில மாற்றங்களைச் செய்தால் விவசாயி சின்னத்தைப் பரிசீலிப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பதாகவும் அதை நாம் தமிழர் கட்சி ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், ஏர் கலப்பை விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் மே 10ஆம் தேதி அறிவித்தது.
இத்தகவலை அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமது எக்ஸ் தளத்தில் பதிவாக வெளியிட்டுள்ளார்.
அவருக்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் மீண்டும் விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதால் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.