திருநெல்வேலி: பனிரெண்டாம் வகுப்பு தேர்வு நாளன்று தந்தை திடீரெனக் காலமானதால், கடும் அதிர்ச்சி அடைந்த போதிலும், துக்கத்தை மறைத்துக்கொண்டு தேர்வு எழுதச் சென்றார் மதுமிதா என்ற மாணவி.
மனதை கனக்கச் செய்யும் இந்தச் சோக நிகழ்வு நெல்லை அருகே மார்ச் 11ஆம் தேதி நடந்துள்ளது.
நெல்லை மாவட்டம், திசையன்விளை தாலுகா இட்டமொழி அருகே வடலிவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாதுரை (55 வயது).
இவருக்கு பானுமதி என்ற மனைவி, மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மகள் மதுமிதா அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அய்யாதுரைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், அது பலனளிக்காமல் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை அவர் திடீரெனக் காலமானார்.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மிக முக்கியமானது. இதில் பெறும் மதிப்பெண்களைக் கொண்டே மாணவர்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது.
நேற்று மதுமிதா கணிதப் பாடத்துக்கான தேர்வை எழுதினார். அதிகாலையில் குடும்பத் தலைவரைப் பறிகொடுத்ததை அடுத்து, மதுமிதாவும் அவரது குடும்பத்தாரும் கதறி அழுதனர்.
பின்னர் அக்கம்பக்கத்தார் மதுமிதாவுக்கு ஆறுதல் கூறி, அவரைத் தேற்றி, தேர்வு எழுத அனுப்பி வைத்தனர்.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக, இறந்த தந்தையின் உடலை வணங்கிப் புறப்பட்டார் மதுமிதா.
அவரது நிலையைக் கண்டு அங்கிருந்த அனைவரும் கலங்கினர்.
தேர்வு எழுதி முடித்து வந்ததும் தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்றார் மாணவி மதுமிதா.


