அய்யா என்று சொல்லிக்கொண்டே அவமானப்படுத்துகிறார்கள்: ராமதாஸ்

2 mins read
a83f8eee-8b66-4b6f-9abb-280f3a27e58b
பாமக நிறுவனர் ராமதாஸ். - படம்: தமிழக ஊடகம்

விழுப்புரம்: “எங்களுக்கு எல்லாமே அய்யாதான் என சொல்லிக்கொண்டே என்னை அதலபாதாளத்தில் தள்ளுகிறார்கள், அவமானப்படுத்துகிறார்கள், சிறுமைப்படுத்துகிறார்கள்,” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “எனக்கும் செயல்தலைவருக்கும் இடையே நடக்கும் பிரச்சினைகள் முழுமையாக உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் ‘டிரா’வில் தான் உள்ளது. இன்னும் முடிவுக்கு வரவில்லை.

“34 அமைப்புகளைச் சேர்ந்த 14 பஞ்சாயத்துக்காரர்கள் ஒரு தீர்ப்பு வழங்கினார்கள். அன்புமணிக்கு தலைவர் பதவியை விட்டுத்தர நான் தயாராக இருந்தேன். இரு பெரிய ஆளுமைகள் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

“நான் தயாராக இருந்தும் அன்புமணி சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதன்பின் எனக்குள் உள்ள இயற்கையான கோபம் வெளியில் வந்து, நீயா நானா பார்த்து விடுவோம் என்ற முடிவுக்கு வந்து இப்போது செய்தியாளர்களைச் சந்திக்கிறேன்.

“கட்சியில் எல்லாம் எனக்கே வேண்டும் என்று அன்புமணி நினைக்கிறார். எனது பேரன் தானே முகுந்தன். அவருக்குப் பதவியை ஏன் கொடுக்கக் கூடாது என்று நான் கேட்டபோது, ‘அவர் கேட்டை சாத்திவிட்டு கொள்ளுப்பேரக் குழந்தைகளுடன் விளையாடட்டும்’ என்று சொல்கிறார். நான் இப்போதும் தினமும் ஆயிரக்கணக்கான மக்களைச் சந்திக்கிறேன்.

“பாட்டாளி சொந்தங்கள் என்னை குலதெய்வமாக நினைக்கிறார்கள். நான் அவர்களை எனது வழிகாட்டிகளாக மதிக்கிறேன். நான் 46 ஆண்டுகள் உருவாக்கி கட்டிக்காத்து காப்பாற்றிய கட்சி இது.

“இன்னும் ஓரிரு ஆண்டுகள் இக்கட்சிக்குத் தலைவராக இருக்க எனக்கு உரிமை இல்லையா, எனக்கு உரிமை இல்லையா எனக் கேட்பதே எனக்கு அவமானமாக உள்ளது. ஒவ்வொரு செங்கல்லாக நான் கட்டிய பாமக எனும் மாளிகை இது. இந்த மாளிகையில் அவரை குடியேற்றிய என்னையே, கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் வகையில் செயல்படுகிறார்.

“என்னைச் சந்திக்க வரும் மாவட்டச் செயலாளர்களைச் சந்திக்கவிடாமல் தடுத்து, என்னை அவமதித்துவிட்டார். அன்று அமைதி காத்திருந்தால் அதிகாரம் அன்புமணிக்குக் கிடைத்திருக்கும். அப்போதைய கூட்டத்துக்கு சிலர் மட்டுமே வந்தனர். அன்புமணியை நான் கட்சியை விட்டு நீக்கப்போவதாகச் சொல்லியுள்ளனர். அன்புமணியை கட்சியை விட்டு வெளியேற்ற நான் என்ன முட்டாளா?.

“இன்னும் ஓரிரு ஆண்டுகள் பொறுமை காத்திருந்தால் நானே அவருக்கு முடிசூட்டுவிழா நடத்தியிருப்பேன். தந்தைக்குப் பிறகே தனயன். அய்யாவுக்குப் பின்னே அன்புமணி.

“குருவுக்கு மிஞ்சிய சீடன் இருக்கலாம். ஆனால் தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது. இதுவே நீதி, நேர்மை, தர்மம் ஆகும். என்னை குலசாமி என சொல்லிக்கொண்டே என் நெஞ்சில் குத்துகிறார்கள்.

“எங்களுக்கு எல்லாமே அய்யாதான் என சொல்லிக்கொண்டே என்னை அதலபாதாளத்தில் தள்ளுகிறார்கள், அவமானப்படுத்துகிறார்கள், சிறுமைப்படுத்துகிறார்கள்,” என்றார் ராமதாஸ்.

குறிப்புச் சொற்கள்