தஞ்சை: குழந்தைகளின் கண் முன்னே தந்தை ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் தஞ்சாவூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அங்குள்ள மேல உளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சௌந்தரராஜன் (36 வயது). இவரது மனைவி சரண்யா (33 வயது). இத்தம்பதியருக்கு நிவேதா (14) நிதிஷா (12 வயது) என்ற மகள்கள் உள்ளனர்.
திருப்பூரில் வசித்து வரும் சௌந்தரராஜன், பொங்கலையொட்டி திங்கட்கிழமையன்று தன் குடும்பத்துடன் சொந்த கிராமத்திற்கு வந்திருந்தார்.
வீட்டிற்குச் செல்லும் வழியில் கல்லணை கால்வாயின் கிளை ஆறான கல்யாண ஓடையில் இறங்கி குளித்துள்ளார் சௌந்தரராஜன். தந்தை ஓடையில் உற்சாகமாக குளிப்பதை அவரது இரு மகள்களும் வேடிக்கை பார்த்தபடி, அதைக் காணொளியாகப் பதிவு செய்தனர்.
நீரின் வேகம் திடீரென அதிகரித்தது. அதில் சௌந்தரராஜன் அடித்துச் செல்லப்பட்டார். நீண்ட நேரமாகியும் நீரில் மூழ்கிய தந்தையைக் காணாமல் சௌந்தரராஜனின் மகள்களும் மனைவியும் கண்ணீர்விட்டு அழுதனர்.
இந்நிலையில், இச்சம்பவம் நடந்த திங்கட்கிழமை இரவு சௌந்தரராஜனின் உடல் மீட்கப்பட்டது.