விழுப்புரம்: பாட்டாளி மக்கள் கட்சியில் உருவான பிரச்சினைக்கு நான்தான் காரணம் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, மிகுந்த வேதனையளிக்கிறது என்று பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸை விழுப்புரத்தில் சந்திக்கச் சென்று கொண்டிருந்த ஜி.கே. மணி, செய்தியாளர்களிடம் பேசினார்.
“காலச்சூழலால் பாமகவில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது சோதனையான காலக்கட்டம்.
“உட்கட்சிப் பிரச்சினையை வெளியே சொல்ல முடியாது. என்னைப் பற்றி அவதூறாகப் பேசுவதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. பல ஆண்டுகள் கட்சிக்காகப் பணியாற்றிய நான் பாமக சிதற வேண்டும் என்று நினைப்பேனா?
“மேலும், பாமகவில் உருவெடுத்துள்ள பிரச்சினைக்கு நான்தான் காரணம் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மிகுந்த வேதனையளிக்கிறது. இந்தத் தகவலைக் கேட்டு கண்ணீர்விட்டு அழுதேன்.
“ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு விரைவில் நடக்க வேண்டும் என்பதுதான் பாமகவினரின் விருப்பம். பொறுப்பாளர்களை மாற்ற வேண்டாம் என்று வலியுறுத்தினேன்.
“ஆனால் மாற்றிவிட்டார். அது ராமதாஸின் விருப்பம். இப்போது உள்ளே சென்றால் ஏன் இதைப் பற்றி பேசினாய் என கோபித்துக் கொள்வார்.
“நிகழக்கூடாத சம்பவங்கள் பாமகவில் நடந்துவிட்டன. பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இணைய அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,” என்று ஜிகே மணி கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அப்பா நீக்கினார்; மகன் சேர்த்தார்
இதற்கிடையே, அன்புமணி ஆதரவாளர்களான பாமக மாநிலப் பொருளாளர் திலகபாமா, விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் மயிலம் எம்எல்ஏ சிவக்குமார் உட்பட 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை ராமதாஸ் நீக்கியுள்ளார்.
நீர்வாகிகள் நீக்கப்படும் பட்டியல் மேலும் நீளும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
ஆனால், மாநிலப் பொருளாளராக திலகபாமா, மாவட்டச் செயலாளராக சிவக்குமார் ஆகியோர் தங்களது பொறுப்புகளில் தொடர்வர் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.