குகேஷ் உருவத்தை வண்ண நூலால் வரைந்து வாழ்த்திய பெண் ஓவியர்

1 mins read
90c53117-4096-47af-9dbf-432599140543
வண்ண நூலால் வரையப்பட்ட குகேஷ் ஓவியமும் அதனை வரைந்த ஓவியர் ரேவதி சௌந்தரராஜனும். - படம்: தமிழக ஊடகம்

கோவை: இளம் வயதில் உலக சதுரங்க சாம்பியன் பட்டம் வென்ற டி.குகேஷின் உருவத்தை வண்ண நூலால் வரைந்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார் பெண் ஓவியர் ஒருவர்.

கோவை மாவட்டம் கருண்யா பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி சௌந்தரராஜன். தனியார் பள்ளி விடுதி கண்காணிப்பாளரான அவர், ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம் கொண்டவர்.

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் மரத்தூள், காய்கறி, தானிய வகைகள் என பல்வேறு இயற்கைப் பொருள்களைக் கொண்டு ஓவியம் வரைந்து வருகிறார் ரேவதி.

இந்த நிலையில், இம்மாதம் நடைபெற்ற உலக சதுரங்க சாம்பியன் போட்டியில் இளம் வயதில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷின் சாதனையைக் கௌரவிக்கும் வகையில் ஓவியர் ரேவதி வண்ண நூலால் குகேஷின் உருவப் படத்தை வரைந்துள்ளார்.

அந்தப் படம் 3 1/4 அடி உயரம், 3 அடி அகலத்தில் காடா துணியினை வைத்து வண்ண நூலால் வரையப்பட்டுள்ளதைப் பார்த்து ரசித்த அந்த வட்டார மக்கள் உள்ளிட்ட பலரும் ரேவதி சௌந்தரராஜனுக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இது குறித்த காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

குகேஷுக்கு தமிழக அரசு சார்பில் அண்மையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது குகேஷுக்கு ரூ. 5 கோடி பரிசாக வழங்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்