தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘ஃபெங்கல்’ புயல்: சென்னைக்கு ஆபத்து நீங்கியது

2 mins read
d3d43702-a178-4e64-869d-d96798b4e54a
புயலின் வேகமும் அது நகரும் திசையும் மணிக்கு ஒருமுறை மாறி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டது. - படம்: ஊடகம்
multi-img1 of 2

சென்னை: தமிழகத்தை அதிகமாக அச்சுறுத்திய ‘ஃபெங்கல்’ புயல், சிங்கப்பூர் நேரப்படி சனிக்கிழமை (நவம்பர் 30) நள்ளிரவு சுமார் 1 மணியளவில் கரையைக் கடக்கத் தொடங்கியது.

புயலின் வேகமும் அது நகரும் திசையும் மணிக்கு ஒருமுறை மாறியபடி இருந்ததாகக் குறிப்பிட்ட சென்னை வானிலை ஆய்வு மையம், சென்னைக்கு விடுக்கப்பட்டிருந்த அதி கன மழைக்கான ஆபத்து நீங்கியதாகத் தெரிவித்துள்ளது.

அதிக மழைப்பொழிவு பதிவு:

கடந்த இரு தினங்களாக பெய்து வந்த கனமழை காரணமாக, சென்னை மீனம்பாக்கம் பகுதியில் 11.4 சென்டி மீட்டர் மழைப்பொழிவு பதிவானது.

ஆவடியில் 24 செ.மீ., கும்மிடிப்பூண்டியில் 25 செ.மீ என அதிக அளவு பல்வேறு இடங்களில் மழை பதிவாகி உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி உட்பட சென்னையின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்யும் ஏரிகளுக்கான நீர் வரத்து அதிகரித்துள்ளது.

நிவாரண முகாம்களில் 5,000 பேர்:

சென்னையில் 44 மழை நிவாரண முகாம்களில் ஏறக்குறைய 5,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாநகரில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் சனிக்கிழமை முழுவதும் இலவச உணவு விநியோகிக்கப்பட்டது. மொத்தம் 2.32 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூன்று பேர் பலி:

இதற்கிடையே, மழை சார்ந்த சம்பவங்களில் மொத்தம் மூன்று பேர் பலியாகிவிட்டனர். மழை காரணமாக, அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த சென்னை, வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்ற ஆடவர் உயிரிழந்தார்.

அவரது மரணம் தமக்கு ஆழ்ந்த சோகத்தை அளித்திருப்பதாகவும் சக்திவேல் குடும்பத்துக்கு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்து:

‘ஃபெங்கல்’ புயல் தாக்கத்தை எதிர்கொள்ள மத்திய, மாநில அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் தேவையின்றி வெளியே வராமல், வீடுகளுக்குள் தங்கியிருக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

புயல் கடந்தாலும் மழை நீடிக்கும்:

‘ஃபெங்கல்’ புயல் கரையைக் கடக்க நான்கு மணி நேரத்துக்கு மேல் ஆகும் என வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை மாலை தெரிவித்தது.

எனினும், பத்து மாவட்டங்களில் மிதமான மழை நீடிக்கும் என்றும் மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் அம்மையம் கூறியது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியது. இதனால் பல இடங்களில் முன்னெச்சரிக்கையாக சாலைகள் மூடப்பட்டன.

சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

‘ஃபெங்கல்’ புயல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலைக்குள் கரையைக் கடந்துவிட்டாலும், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை நீடிக்கும் என வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்