திருச்சி: பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் விவகாரத்தில் கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து கைதான திரைப்பட இயக்குநர் மோகன் ஜி, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பழனி கோயிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தப் பிரசாதத்தில் கருத்தடை மாத்திரைகள் கலக்கப்படுவதாக கூறியதைத் தொடர்ந்து மோகன் ஜி கைதுசெய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து திருச்சி நகர நீதிமன்றம் ஒன்று செவ்வாய்க்கிழமையன்று (செப்டம்பர் 24) 39 வயது மோகன் ஜியை பிணையில் விடுவித்தது.
மோகன் ஜி, திரெளபதி, பழைய வண்ணாரப்பேட்டை, ருத்ர தாண்டவம், பகாசுரன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
யூடியூப் ஒளிவழி ஒன்றுடன் நடைபெற்ற நேர்காணலில் பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் கலக்கப்பட்டிருப்பதாக மோகன் ஜி கூறியிருந்தார். அதோடு, அந்தப் பிரசாதம் பெரிய அளவில் வீணடிக்கப்பட்டதாகவும் கூறி அவர் சர்ச்சையைக் கிளப்பினார்.
திருப்பதி லட்டுக்களைத் தயார்செய்ய விலங்குக் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக அண்மையில் பெரும் சர்ச்சை எழுந்தது. அதனைத் தொடர்ந்து பழனி பஞ்சாமிர்தம் குறித்து மோகன் ஜியின் கருத்துகள், தமிழ்நாட்டின் சமயபுரம் மாரியம்மன் கோயில் இந்து சமய அறநிலையத் துறை (HR&CE) அதிகாரியான கவியரசு என்பவரின் கவனத்தை ஈர்த்தது.
திரு கவியரசின் புகாரின்படி, வன்முறையைத் தூண்டுவதோடு இன நல்லிணக்கத்துக்குப் பங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் பொய்த் தகவலைப் பரப்புவதாக மோகன் ஜி மீது சமயபுரம் காவல்துறையினர் குற்றச்சாட்டுகள் சுமத்தினர்.

