சென்னை: எழுத்தாளர்கள் கௌரவிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசின் நிதித்துறைச் செயலாளர் த.உதயச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை மாநிலக்கல்லூரி தமிழ்த்துறை மற்றும் ஆங்கிலத்துறை சார்பில் ‘எழுத்தாளர் பெருமாள்முருகன் அகவை-60’ என்ற தலைப்பில் ஒரு நாள் பன்னாட்டு கருத்தரங்கம் திங்கட்கிழமை நடைபெற்றது.
இதில், பெருமாள்முருகனின் படைப்புகள் தொடர்பாக பல்வேறு கோணங்களில் 60 பெண்கள் எழுதிய 60 கட்டுரைகளின் தொகுப்பான ‘நனவிலியின் நிலம்’ என்ற நூல் வெளியிடப்பட்டது.
பல்வேறு தலைப்புகளில் நடைபெற்ற இலக்கிய அமர்வுகளில் பேராசிரியர் வில்லியம் ஜான் போஸ்கோ, எழுத்தாளர் அ.மங்கை, இணை பேராசிரியர் கோ.ரகுபதி, எழுத்தாளர் ஜனனி கண்ணன், வழக்கறிஞர் அ.அருள்மொழி உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.
மாலையில் நடைபெற்ற கருத்தரங்க நிறைவுவிழாவில் தமிழக அரசின் நிதித்துறை செயலர் உதயச்சந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் மாவட்டம்தோறும் புத்தகக் காட்சிகள் நடத்தப்படுகின்றன. சென்னையில் பன்னாட்டுப் புத்தகக் காட்சி நடத்தப்படுகிறது.
சாகித்திய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட இருந்து கடைசி நேரத்தில் ரத்துசெய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிர்வினையாக தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் தேசிய அளவில் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகையுடன் செம்மொழி விருதுகள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருப்பது தேசிய அளவில் கவனம் பெற்றிருக்கிறது.
எழுத்தாளர்களை தமிழ்ச்சமூகம் கௌரவப்படுத்த வேண்டும். அவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும். எப்போதெல்லாம் மொழிகளுக்குச் சிக்கல் வருகிறதோ அப்போது அதற்கான முன்னெடுப்புகளை செய்வது நமது வழக்கம். அந்த வகையில் தமிழ் மொழியில் மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் சிறந்த படைப்புகள்வர வேண்டும் என்பதற்காக செம்மொழி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த முன்னெடுப்பை அனைவரும் பாராட்டுகிறார்கள் என்று கூறினார்.

