சென்னை: தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் தனியார் மீன் உணவு ஏற்றுமதித் தொழிற்சாலையின் உற்பத்திப் பிரிவில் எதிர்பாராதவிதமாக அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
மாண்ட நால்வரும் பெண்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) காலை நிகழ்ந்த இந்த விபத்தின் காரணமாக 15 பேர் அரசு மருத்துவமனையில் தீவிரக் கண்காணிப்புப் பிரிவிலும், 23 பேர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் உள்ளனர். மேலும் 24 பேர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.
வாயுக் கசிவு நேர்ந்தபோது அந்தத் தொழிற்சாலையில் அசாம், ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் உட்பட வெளிமாநிலத் தொழிலாளர்கள் கிட்டத்தட்ட120 பேர் இருந்தனர்.
இந்நிலையில், அமோனியா வாயுக் கசிவால் உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கவும், விபத்து குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மூவர் கொண்ட குழுவை அமைத்தும் முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாகத் திரு விஜய் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) இரவு அறிக்கை வெளியிட்டார்.
மாண்டவர்களின் உடலைச் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி நல்லடக்கம் செய்ய அரசு செலவில் நடவடிக்கை மேற்கொள்ளவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலத் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் ஜெ.முகமது பர்வேஸ் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தச் சம்பவத்தில் ஏழு பேர் உயிரிழந்ததாக முதலில் தகவல் வெளியான நிலையில், தற்போது நான்கு பேர் மட்டுமே உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் அர்லேகர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

