நிதி நிறுவன மோசடி: 27 வங்கிக் கணக்குகள் முடக்கம்

நிதி நிறுவன மோசடி: 27 வங்கிக் கணக்குகள் முடக்கம்

2 mins read
9d51dc5f-3318-4748-8dd5-bc55d9db87f8
சென்னை மயிலாப்பூரில் இயங்கிவந்த நிதி நிறுவனத்தில் நிதி மோசடி செய்ததாகக் கைதுசெய்யப்பட்டுள்ள தேவநாதன். - படங்கள்: இந்திய ஊடகம்

சென்னை: நிதி நிறுவன மோசடியில் கைதுசெய்யப்பட்டுள்ள தேவநாதனின் 27 வங்கிக் கணக்குகளைப் பொருளியல் குற்றப்பிரிவுக் காவல்துறையினர் முடக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மயிலாப்பூா் தெற்கு மாட வீதியில் ‘தி மயிலாப்பூா் இந்து சாசுவத நிதி லிட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

அந்நிறுவனத்தில் முதலீடு செய்தோர்க்கு முதிர்வுத்தொகையும் வட்டிப்பணமும் முறையாக வழங்கப்படவில்லை எனப் புகார் எழுந்தது.

பாதிக்கப்பட்டோரில் ஒருவர் அளித்த புகாரின்பேரில் பொருளியல் குற்றப்பிரிவுக் காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிந்து, அந்நிதி நிறுவனத்தின் நிர்வாகி தேவநாதன், இயக்குநர்கள் குணசீலன், மகிமைநாதன் ஆகியோரைக் கைதுசெய்தனர்.

அத்துடன், மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவனம், தியாகராய நகரில் உள்ள தேவநாதன், அவருக்கு நெருக்கமான நபா்களின் வீடுகள் என மொத்தம் 12 இடங்களில் சோதனை மேற்கொண்ட காவல்துறையினர், ரூ.400,000, இரண்டு காா்கள், சில முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

இதனிடையே, மயிலாப்பூா் நிதி நிறுவனத்தின்மீது 300க்கும் மேற்பட்ட புகாா்களும் தேவநாதன்மீது 800க்கும் மேற்பட்ட புகார்களும் வந்தன.

இதனையடுத்து, தேவநாதனின் 27 வங்கிக் கணக்குகளை அதிகாரிகள் முடக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும், தேவநாதனுக்கு தொடர்புடைய இரண்டு கட்டடங்கள் உட்பட எட்டுக் கட்டடங்களுக்கு முத்திரை வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தலைமறைவாக இருந்த தேவநாதன் கடந்த 13ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார். அவரை ஏழு நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க பொருளியல் குற்றப்பிரிவுக் காவல்துறையினர் மனு தாக்கல் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.

தலைமறைவாக இருக்கும் நிதி நிறுவன இயக்குநர்களையும் காவல்துறை தேடி வருகிறது.

குறிப்புச் சொற்கள்