சென்னை: சென்னையில் பிட்புல், ராட்வீலர் ரக நாய்களை வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பதற்கான தீர்மானம் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, பிட்புல், ராட்வீலர் வகை நாய்களை வளர்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தத் தடையையை மீறும் வகையில் பலரும் அந்த இன நாய்களை வளர்த்து வருகின்றனர்.
எனவே, சென்னை மாநகராட்சியின் தடையை மீறுவோருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கும் தீர்மானத்தை சென்னை மாநகராட்சி நிறைவேற்றியுள்ளது.
குறிப்பிட்ட இந்த நாய் இனங்கள், உரிமையாளரின் கட்டுப்பாட்டை மீறி ஆக்ரோஷமாகச் செயல்படுவதாகவும், சாலையில் செல்வோரைக் கடித்துக் குதறுவதாகவும் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஏற்கெனவே ராட்வீலர், பிட்புல் இன நாய்கள் வைத்திருப்பவர்கள் உரிய விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில், 98,523 செல்லப்பிராணிகள் குறித்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், இப்போது வரை 56,378 செல்லப் பிராணிகளுக்கு மட்டுமே உரிமம் பெறப்பட்டுள்ளன.
இந்நிலையில் ராட்வீலர், பிட்புல் டெரியர் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட நாய் வகைகளை வீட்டில் வளர்ப்பதற்குத் தடை விதிக்கும் தீர்மானம் சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

