சென்னை: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து நாய்களுக்கும் நுண்சில்லு (மைக்ரோசிப்) பொருத்த சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. புதிய நடைமுறை அக்டோபர் முதல் நடப்புக்கு வருகிறது.
நுண்சில்லு பொருத்தாத வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு ரூ.3,000 அபராதம் விதிக்கப்படும். வளர்ப்பு நாய்களை வெளியே அழைத்துச் செல்லும்போது அவற்றுக்கு வாய்மூடி அணிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நுண்சில்லு பொருத்துவது குறித்து தனியார், அரசு கால்நடை சுகாதார மையங்களில் விரைவில் வழிமுறைகள் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் வளா்ப்பு நாய்களுக்காக 11,000 பேர் மட்டுமே உரிமம் பெற்றுள்ளனர் எனவும் உரிமம் பெறாமல் நாய் வளர்ப்போர் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அண்மைக்காலமாகத் தமிழகத்தில் தெருநாய்களாலும் வளர்ப்பு நாய்களாலும் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மேலும், நாய் வளர்ப்போர் தங்களது நாய்களுக்கு உடல்நலக்குறைவு, நோய்ப் பாதிப்பு அல்லது பராமரிக்க முடியாத சூழல் ஏற்பட்டால் அதனைச் சாலையில் விட்டுச்செல்வதும் பிரச்சினையை அதிகரித்துள்ளது. இதனைத் தடுக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.