சென்னை: தமிழகத்தில் சமையல் எரிவாயு உருளை (கேஸ் சிலிண்டர்) வாடிக்கையாளர்கள் வரும் திங்கட்கிழமைக்குள் (மார்ச் 31) விரல் ரேகை பதிவுசெய்ய வேண்டும்; இல்லாவிட்டால் அவர்களுக்கு சமையல் எரிவாயு உருளை கிடைக்குமா என்ற குழப்பம் எழுந்துள்ளது.
இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்குத் தமிழகத்தில் 23.5 மில்லியன் வீட்டு சமையல் எரிவாயு உருளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அந்நிறுவனங்கள், வீடுகளுக்கு 14.20 கிலோகிராம் எடையில் எரிவாயு உருளைகளைச் சந்தை விலைக்கு விற்கின்றன.
அந்த விலைக்கு வாங்கியதும் மத்திய அரசாங்கத்தின் மானியத் தொகை பயனாளரின் வங்கிக் கணக்கில் அனுப்பப்படுகிறது. அதன் காரணமாக சமையல் எரிவாயு உருளை பெறும் பயனாளர்களின் விவரங்களைச் சரிபார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன.
அதன்படி,எரிவாயு உருளை இணைப்பு யார் பெயரில் பதிவுசெய்யப்பட்டுள்ளதோ அவரே சம்பந்தப்பட்ட முகவைக்குச் சென்று தமது விரல் ரேகையைப் பதிவுசெய்ய வேண்டும்.
அதோடு, கருவிழி அல்லது முக அடையாளங்கள் வாயிலாகவும் வாடிக்கையாளர்களின் விவரங்கள் சரிபார்க்கப்படுவதாகத் தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இப்பணிகளை இம்மாதம் 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று மத்திய அரசாங்கம் கெடு விடுத்திருக்கிறது.
இதுவரை, 50 விழுக்காட்டுப் பயனாளர்களின் விவரங்கள்கூட சரிபார்க்கப்படவில்லை. எனவே, விரல் ரேகை பதிவு செய்யாதோருக்கு ஏப்ரல் முதல் சமையல் எரிவாயு உருளைகள் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

