ஆவடி: திருமுல்லைவாயில் பகுதியில் ஒரு பள்ளியை ஒட்டியிருந்த வேதிப்பொருள் சேமிப்புக் கிடங்கில், வியாழக்கிழமை (பிப்ரவரி 20) பகல் 12 மணியளவில் தீப்பற்றியது.
அந்தக் கிடங்கில் வேதிப்பொருள் சேமித்து வைக்கப்பட்டு, பின்னர் அம்பத்தூர் தொழிற்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.
சார்லஸ் என்பவர் நடத்தி வந்த அந்தக் கிடங்கில் திடீரென பற்றி எறிந்த தீ அருகேயுள்ள கட்டடங்களுக்கும் பரவத் தொடங்கியது. தகவலறிந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை, ஆவடி, பூந்தமல்லி, மதுரவாயல், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து எட்டு வாகனங்களில் வந்த 50 தீயணைப்பு வீரர்கள் கிட்டத்தட்ட 6 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் கிடங்கில் இருந்த வேதிப்பொருள்கள் அனைத்தும் முழுமையாகத் தீக்கிரையாகின.
இந்தத் தீவிபத்தால் ஏற்பட்ட புகை மண்டலம், அருகேயிருந்த தனியார் சிபிஎஸ்இ பள்ளியின் மூன்று தளங்களைக் கொண்ட கட்டடத்தின் ஒரு பகுதியினுள் புகுந்தது. உடனே, அக்கட்டடத்தில் இருந்த ஏறக்குறைய 110 மாணவ, மாணவிகளைப் பள்ளி நிர்வாகத்தினர் துரிதமாக வெளியேற்றினர். இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இந்தத் தனியார் பள்ளியில் கிட்டத்தட்ட 4 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். வேதிப்பொருள் கிடங்கு தீப்பற்றியதையடுத்து, பாதுகாப்புக் கருதி அந்தக் கிடங்குக்கு அருகேயிருந்த கல்வி நிலையங்களுக்கு உடனடியாக விடுமுறை அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த தீவிபத்தால் கிடங்குக்கு அருகேயுள்ள தனியார் பள்ளி வளாகத்தில் இருந்த 5 சைக்கிள்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரையாகின. பள்ளி நூலகம் மற்றும் அறிவியல் ஆய்வகம், வகுப்பறைகளில் இருந்த ஆயிரக்கணக்கான நூல்கள், 300க்கும் மேற்பட்ட மாணவர்களின் இருக்கைகள் சேதமாயின.

