எரிவாயுத் தட்டுப்பாட்டால் விறகு விலையும் கூடியது

எரிவாயுத் தட்டுப்பாட்டால் விறகு விலையும் கூடியது

2 mins read
db30193d-b6ea-43d1-b810-7e10cfa31d59
நோன்புப் பெருநாள் காலம் என்பதாலும் விறகுக்கான தேவை அதிகரித்ததாகக் கூறப்பட்டது. - படம்: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

திருச்சி: உணவகங்களுக்கும் சமையல் நிறுவனங்களுக்குமான எரிவாயுக்கலன் விநியோகம் குறைந்துள்ள நிலையில், திருச்சியில் விறகு விலையும் கூடியுள்ளது.

கிலோ ஏழு ரூபாய்க்கு விற்கப்பட்டுவந்த விறகு சென்ற வாரம் கிலோ 12 ரூபாயாகவும், கடந்த சில நாள்களில் 15 - 17 ரூபாயாகவும் கூடிவிட்டது என்று வணிகர்கள் கூறினர். ஒரு மாதத்திற்குமுன் 25 கிலோ விறகுக்கட்டு 150 ரூபாய்க்கு விற்கப்பட்டதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவித்தது.

நோன்புப் பெருநாளை முன்னிட்டு விறகுக்கான தேவையும் அதிகமாக இருந்தது. அதனால், நிலைமை இன்னும் மோசமாகிவிட்டதாக விறகு வணிகர் ஒருவர் குறிப்பிட்டார்.

“திருமணங்கள் காரணமாக மார்ச் மாதத்தில் விறகுக்கு அதிகத் தேவை இருக்கும். அதே நேரத்தில், விதைப்புக் காலம் என்பதால் அதிகமானோர் மரம் வெட்டும் வேலைக்குப் பதிலாக விவசாய வேலைகளுக்குச் சென்றுவிடுவர். இதனால், விறகு வரத்தும் குறைவாக இருக்கும். இம்முறை எரிவாயுப் பற்றாக்குறையும் சேர்ந்துவிட்டதால் விறகையே அதிகம் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது,” என்று திரு மாதவன் கூறினார்.

புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திருச்சிக்கு அதிக விறகு வருகிறது. அங்கும் இருப்பு தீர்ந்து வருவதால் அரியலூர், பெரம்பலூர் போன்ற வேறு பகுதிகளையும் விறகு வணிகர்கள் நாடத் தொடங்கியுள்ளனர்.

உணவு விலை அதிகரிப்பு

எரிபொருள் விலையேற்றமானது உணவு விலைகளில் எதிரொலிக்கத் தொடங்கி இருப்பதாக உணவகங்களும் சமையல் நிறுவனங்களும் தெரிவித்தன.

பிரியாணி உணவக உரிமையாளர் ஒருவர் கூறுகையில், நோன்புப் பெருநாள் சிறப்பு உணவுகளின் விலை 10 விழுக்காடு கூடிவிட்டது என்றார். ஆயினும், அதற்கான தேவையும் வாடிக்கையாளர்களின் ஆதரவும் குறையவில்லை என்று அவர் சொன்னார்.

இருப்பினும், எரிபொருள் விலையேற்றத்தின் முழுச் சுமையையும் வாடிக்கையாளர்கள் தலையில் கட்ட சில உணவகங்கள் விரும்பவில்லை.

உணவுக்கான வாடிக்கையாளர்களின் முன்பதிவு குறையவில்லை என்றபோதும் அவர்கள் உணவின் அளவைக் குறைத்துக்கொண்டதாக உணவக உரிமையாளர் ஒருவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்