கோயம்புத்தூர்: இந்தியாவில் முதல் முறையாக கோயம்புத்தூரில் இரு மருத்துவமனைகளுக்கு இடையே ‘இணை மாற்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை’ வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.
கல்லீரல் பாதிக்கப்பட்டு ஜெம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 59 வயது ஆண் நோயாளிக்கும், ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற திருப்பூரைச் சேர்ந்த 53 வயது ஆண் நோயாளி இருவருக்கும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்டது.
இருவரது மனைவிகளும் உறுப்புதானம் செய்ய முன்வந்தபோதும், அவர்களின் ரத்தப் பிரிவு ஒத்துவராததால் சிகிச்சை செய்ய முடியாமல் போனது.
இந்நிலையில், ‘இணை மாற்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை’ மூலம் இருவருக்கும் சிகிச்சை அளிக்கலாம் என்பது தெரியவந்தது. ஒருவரது மனைவியின் கல்லீரலை மற்றவருக்குக் கொடுக்க முடிவெடுக்கப்பட்டது.
ஜூலை 3ம் தேதி இரு மருத்துவமனைகளிலும் ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சை நடந்தது.
இதுகுறித்து ஜெம், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர்கள் கூட்டாகச் செய்தியாளர்களிடம் பேசினர்.
“இரு மருத்துவமனைகளுக்கு இடையேயான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய கூடுதலாக நிறைய வழிமுறைகள் இருந்தன. 5 கிலோ மீட்டர் தொலைவை கொண்ட இந்த 2 மருத்துவமனைகளின் இரண்டு வெவ்வேறு அறுவை சிகிச்சை அரங்குகளில் ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சை நடந்தது.
“கல்லீரலை கொடையாளர்களிடம் இருந்து கவனமாக எடுத்து, பின்னர் மாற்று அறுவை சிகிச்சையை ஒருங்கிணைக்க நிகழ்நேர வீடியோ பதிவுகள் நிறுவப்பட்டன. உறுப்புகளை கொண்டு செல்ல குளிர் சாதன வசதி கொண்ட பிரத்யேக ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இந்த சிகிச்சையில் போக்குவரத்து உள்ளிட்ட பல தளவாட சவால்கள் இருந்தன. அதை கடந்து வெற்றிகரமாக இந்த சிகிச்சை நடந்தது மருத்துவ உலகில் ஒரு மிகப் பெரும் சாதனை,” என்று அவர்கள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
“கல்லீரல் செயலிழப்பாலும் தகுந்த கொடையாளர்களின் பற்றாக்குறை இருப்பதாலும் ஆண்டுதோறும் 25,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இறந்து வருகிறார்கள். தற்போது இந்த இரு மருத்துவமனைகள் இணைந்து செய்துள்ள சாதனை பலருக்கும் புதிய நம்பிக்கையை அளிக்கிறது. இந்த வெற்றி எதிர்காலத்தில் இதுபோல பல மருத்துவமனைகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயும் நடக்க நல்ல துவக்கமாக அமையும்,” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.