புத்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி

1 mins read
ebd3f89b-94d4-473e-bb21-b14fa7e66469
அடக்க முடியாத காளைகள், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு இரு சக்கர வாகனங்கள், மின்விசிறி, எவர்சில்வர் பாத்திரங்கள், கட்டில் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. - படம்: தினமணி

புதுக்கோட்டை: தமிழகத்தில் புத்தாண்டையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டு முதலில் தொடங்கியது.

தொடக்க விழாவில் கலந்துகொண்ட அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்துப் போட்டிகளைத் தொடங்கி வைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், தச்சன்குறிச்சி கிராமத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், சனிக்கிழமை (ஜனவரி 3) நடைபெற்ற போட்டியைக் காண ஏராளமானோர் திரண்டனர். போட்டி நடைபெறுவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

போட்டி தொடங்கியதும் முதலில் உள்ளூர் கோவில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. பின்னர் மற்ற காளைகளும் களமிறக்கப்பட்டன. சீறி வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் வீரத்துடன் போட்டி போட்டு அடக்க முயன்றனர்.

இந்த ஆண்டு நடைபெறும் முதல் போட்டி என்பதால் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏறக்குறைய 600க்கும் மேற்பட்ட காளைகளும் உள்ளூர் மாடுபிடி வீரர்களும் களம் இறக்கப்பட்டதால் போட்டி விறுவிறுப்பாக இருந்தது.

இந்த முறையும் அடக்க முடியாத காளைகள், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு இரு சக்கர வாகனங்கள், மின்விசிறி, எவர்சில்வர் பாத்திரங்கள், கட்டில் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக, போட்டியில் பங்கேற்ற மாடுபிடி வீரர்களுக்கும் காளைகளுக்கும் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

குறிப்புச் சொற்கள்