தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இணைய மோசடிக்கு முதல்முறையாக ஆயுள் தண்டனை

1 mins read
6af2fb04-a3bc-4e5a-b1de-06a7913ab690
‘டிஜிட்டல் அரெஸ்ட்’ குற்றத்தை பொருளியல் பயங்கரவாதம் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. - படம்: ஊடகம்

கோல்கத்தா: இணைய மோசடிக் குற்றத்தில் ஈடுபட்ட ஒன்பது பேருக்கு கோல்கத்தா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உள்ளது.

இணைய மோசடிக் குற்றத்தில் ஈடுபட்டோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவது இந்தியாவில் இதுதான் முதல்முறை.

தண்டனைக்கு உள்ளான அந்த ஒன்பது பேரும் ஒரு கும்பலாகச் செயல்பட்டனர். அந்தக் கும்பல் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 108 பேரிடம் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்தக் கும்பலில் பெண் ஒருவரும் உள்ளார்.

மகாராஷ்டிரா, ஹரியானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மேற்கெள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் கும்பலைச் சேர்ந்த ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஆண்டு ரனகத் பகுதியைச் சேர்ந்த ஒருவரை ‘டிஜிட்டல்’ கைது செய்திருப்பதாகக் கூறி, அவரிடமிருந்து ரூ.1 கோடி மோசடி செய்தது தொடர்பான வழக்கை மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தின் கல்யாணி நீதிமன்றம் விசாரித்து வந்தது.

விசாரணை முடிந்து, மோசடியில் ஈடுபட்ட ஒன்பது பேருக்கும் தண்டனை விதிக்கப்பட்டது.

போலியான ஆவணங்களைத் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்தக் குற்றச்சாட்டு, பொருளியல் பயங்கரவாதம் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த குற்றவாளிகள் அனைவரும் தங்களுக்கு எதிராக மிக உறுதியான ‘டிஜிட்டல்’ சாட்சிகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டது.

இவர்களிடமிருந்து ஏராளமான வங்கிக் கணக்குப் புத்தகம், ஏடிஎம் அட்டைகள், சிம் கார்டுகள், கைப்பேசிகள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.

குறிப்புச் சொற்கள்