முதல்வராக அமர முதல் சோதனை

முதல்வராக அமர முதல் சோதனை

படம்: சமூக ஊடகம்

07 May 2026 - 6:30 am

3 mins read

தமிழ்நாட்டின் இரு பெரும் கழகங்களின் தலைமைத்துவத்துக்கு வராத சோதனை, ஆட்சி அமைக்கத் தயாராகிவரும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் இதுவரை கண்டிராத தொங்கு சட்டமன்றத்தை, அசாத்தியத் திறனுடன் கையாளக்கூடிய சோதனைதான் அது. அரசியல் பாரம்பரியத்தில் பன்னெடுங்காலமாக ஊறிய அரசியல் தலைவர்களே சாமர்த்தியமாகக் காய் நகர்த்த வேண்டிய விவகாரம் அது. பதவியைப் பெரிதாக நினைக்கும் அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சி நடத்துவது என்பதுதான், போதிய அரசியல் அனுபவம் இல்லாத விஜய்க்கு ஏற்பட்டிருக்கும் முதல் சோதனை.

தொங்கு சட்டமன்றம் என்பது தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்வதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது; சிக்கல் நிறைந்தது. தாங்கிப் பிடிக்கும் கட்சிகளைச் சமாளிப்பதற்கே தனித்திறன் தேவைப்படும்.

‘காலம் காலமாக அரசியல் பிழைப்பு நடத்திவந்த கட்சிகளிலிருந்து மாற்றம் வேண்டும். ஒரே ஒரு வாய்ப்புக் கொடுங்கள்’ என்று கேட்டுப் பிரசாரம் செய்த விஜய், அந்தக் கட்சிகளின் தயவை நாடவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

நான்கு இடங்களில் வென்ற கட்சிகூட துணை முதல்வர் பதவி வேண்டும் என நிபந்தனை போடுகிறது. முதல் ஆளாகக் காங்கிரஸ் கட்சி விஜய்யைச் சந்தித்து ஆதரவுக் கடிதம் தந்துள்ளது. ‘ஐந்து உறுப்பினர்களும் ஆதரிப்பார்கள்; ஆனால், எஞ்சிய இடங்களுக்கு பாஜக கூட்டணியில் வென்ற கட்சிகளின் ஆதரவை நாடக்கூடாது’ என்ற நிபந்தனையின்கீழ் அந்த ஆதரவு வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. காங்கிரசின் வெற்றியில் திமுகவின் வாக்குகள் கலந்திருப்பதையும் அந்த ஆதரவை விஜய் ஏற்றுக்கொள்வதையும் கவனிக்க வேண்டும். ஆட்சி அமைக்குமுன்னரே இப்படி நச்சரிக்கும் கட்சிகளின் துணையோடு ஐந்தாண்டுகளை விஜய் எப்படி நகர்த்தப் போகிறார் என்றே கேட்கத் தோன்றுகிறது. பலம் பொருந்திய கட்சிகளை ஒரே தேர்தலில் வீழ்த்திய சாமர்த்தியம் கூட்டணி அமைப்பதிலும் அவரிடம் இருக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.

இரு தொகுதிகளில் வென்றவர்கள், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 14 நாள்களுக்குள் ஏதேனும் ஒரு தொகுதியைக் கைவிட வேண்டும். விஜய் அவ்வாறு செய்தால் தவெகவின் பலம் 107ஆகவும் அவர்களில் ஒருவரை சபாநாயகராக நியமிக்கும்போது அது 106ஆகவும் குறையும். தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 12 இடங்கள் தேவை. அதுதான் இப்போது இருக்கும் சவால்.

இங்குதான் அரசியல் விளையாட்டுகளை விஜய் பார்க்கப் போகிறார்; அவர் எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்பதை மக்கள் பார்க்கப் போகின்றனர். பதவி பெறாமல் வெளியிலிருந்து ஆதரவு என்பது ஆபத்தானது. வெளியிலிருந்து தங்கள் இஷ்டத்துக்கு அரசாங்கத்தை ஆட்டுவிப்பார்கள். இணங்க மறுத்தால் ஆதரவை விலக்கிக்கொள்வதாக மிரட்டுவார்கள் அல்லது ஆதரவை விலக்கி, அரசாங்கத்தைக் கவிழ்ப்பார்கள். வாஜ்பாயின் சிறுபான்மை பாஜக அரசாங்கத்துக்கு அளித்துவந்த ஆதரவை 1999ஆம் ஆண்டு ஜெயலலிதா விலக்கியதால் அந்த அரசாங்கம் கவிழ்ந்ததை நினைவில் கொள்ள வேண்டும்.

தற்போதைய நிலைமையில், காங்கிரசுடன் சிறிய கட்சிகளின் ஆதரவு தவெகவுக்கு தேவைப்படும். அக்கட்சிகளுக்குப் பதவி கொடுத்தால் அது கூட்டணி அரசாக மாறும். அது குறிப்பிட்ட காலத்துக்கோ நீண்டகாலத்துக்கோ நீடிக்கக்கூடும். 2024 தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெறாவிட்டாலும், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகியவற்றுக்குப் பதவியும் அவற்றின் மாநிலங்களுக்கு நிதி வளமும் அளித்து, அக்கட்சிகளின் ஆதரவுடன் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் எந்தக் குழப்பமும் இன்றிச் செயல்படுவதை விஜய் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்வார் என்றே அரசியல் பார்வையாளர்கள் கணிக்கின்றனர். -திருநா

குறிப்புச் சொற்கள்