தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதல்முறையாக மாநில நிதிநிலை தொடர்பான பொருளாதார ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்கிறது தமிழ்நாடு அரசு

2 mins read
8c21a2cb-68bf-4a2f-8a23-48a16ca04a0b
தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: மார்ச் 14ஆம் தேதி மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், முதல்முறையாக அன்று பொருளியல் ஆய்வறிக்கையைத் தமிழ்நாடு அரசு சமர்ப்பிக்கிறது.

அரசின் நிதிநிலை, உள்நாட்டு உற்பத்தி, செயல்படுத்தி வரும் திட்டங்களின் நிலை, வரும் ஆண்டுகளில் மாநில நிதிநிலை எப்படி இருக்கும் என்பது உள்ளிட்ட பல்வேறு தரவுகள் இந்தப் பொருளியல் ஆய்வறிக்கையில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக மார்ச் 14ஆம் தேதி அன்று தமிழ்நாடு பட்ஜெட் 2025 (நிதிநிலை அறிக்கை) தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “தமிழ்நாடு சட்டசபை விதி 26/1ன் கீழ், பேரவையின் அடுத்த கூட்டத்தைத் தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டசபை மண்டபத்தில் மார்ச் 14, 2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.30 மணிக்குக் கூட்டியுள்ளேன். அன்றைய தினம் 2025-2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார்.

மேலும், பேரவை விதி 193/1ன் கீழ் 2025-2026ஆம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கைகள், பேரவை விதி 189/1ன் கீழ் 2024-2025ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கைகள் மார்ச் 21ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும்,” என்று தெரிவித்திருந்தார்.

கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் திமுக வெற்றிபெற்றது. இந்தத் தேர்தலுக்கு முன்னதாக பல வாக்குறுதிகளைத் திமுக அறிவித்திருந்தது.

அதில் மகளிர் உரிமைத் தொகை, மகளிருக்கு இலவச பேருந்துப் பயணம் உள்ளிட்ட பெரும்பான்மையான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக ஆளும் கட்சி சார்பில் கூறப்பட்டாலும், மின் கட்டண மாதாந்தரக் கணக்கீடு, பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பெரும்பான்மையான வாக்குறுதிகளைத் திமுக நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜனவரி 6ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை நடைபெற்றது. மாதம் 14ஆம் தேதி, அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் முடிந்த பிறகு வேளாண் நிதிநிலை அறிக்கையை, வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

இது எதிர்வரும் சட்டசபைத் தேர்தலுக்கு முந்தைய முழு நிதிநிலை அறிக்கை என்பதால், தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளில் நிறைவேற்றப்படாத பல திட்டங்கள் இதில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026ல் தேர்தல் நடைபெறும் என்பதால், அப்போது இடைக்கால நிதிநிலை அறிக்கை மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.

குறிப்புச் சொற்கள்