ராமேசுவரம்: வங்கக்கடலில் உருவான ஃபெங்கல் புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் எட்டு நாள்களுக்குப் பிறகு திங்கட்கிழமை (டிசம்பர் 2) கடலுக்குச் சென்றனர்.
வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் பாக் நீரிணை மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் அதிகப்பட்சமாக 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நவம்பர் 24 முதல் மறு அறிவிப்பு வரும் வரையிலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்ததுடன், ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல அனுமதி டோக்கன்களையும் மீன்வளத்துறையினர் ரத்து செய்தனர். தொடர்ந்து நவம்பர் 25ல் பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டும், நவம்பர் 27ல் மூன்றாம் எண் புயல் கூண்டும் ஏற்றப்பட்டன.
காற்றழுத்தட்ஹ் தாழ்வு மண்டலம் ஃபெஞ்சல் புயலாக வலுப்பெற்று புதுச்சேரி அருகே கரையைக் கடந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1) பாம்பனில் மூன்றாம் எண் புயல் கூண்டு இறக்கப்பட்டது.
தொடர்ந்து எட்டு நாள்களுக்குப் பின்னர் திங்கட்கிழமைதான் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம் மற்றும் மண்டபம் பாக் நீரிணை கடற்பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். மேலும், செவ்வாய்க்கிழமை பாம்பன் மீனவர்கள் கடலுக்குச் செல்ல உள்ளனர்.