சென்னை: போதைப்பொருள்களை பதுக்கி வைத்திருந்தது, விற்பனை செய்தது போன்ற குற்றங்களுக்காக சென்னையில் மூன்று கல்லூரி மாணவர்கள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கல்லூரி மாணவர்களிடம் விற்பனை செய்வதற்காக ஒரு கும்பல் போதைப் பொருள்களைக் கடத்தி வைத்திருப்பதாக சூளைமேடு காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், காவல்துறையினர் அந்தக் கும்பலைக் கண்காணித்து வந்தனர். அப்போது நலின் ஃபாசித், 32, என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவர் அளித்த தகவலின்பேரில் மேலும் நால்வர் சிக்கினர்.
அன்-ரியான் சோனி, 19, மிக்கான், 20, அயன் கான், 23, மாயூர், 35 ஆகியோர் அவர்கள்.
அவர்களில் மாயூர் தவிர இதர மூவரும் கல்லூரி மாணவர்கள். அந்த மாணவர்கள் தங்கி இருந்த அறையைக் காவல்துறையினர் சோதனை செய்தபோது 51 கிராம் கொக்கைன், 850 கிராம் கஞ்சா ஆகியன கைப்பற்றப்பட்டன.
கைதான ஐவரும் விசாரணைக் காவலில் அடைக்கப்பட்டனர்.
போதைப் பொருள் ஒழிப்புப் புலன்விசாரணைப் பிரிவு அதிகாரிகள், கைதான ஐவரின் பின்னணியில் உள்ளோர் யார் என்று கண்டறிவதில் தீவிரமாக உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
கைதான அனைவரையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்க நீதிமன்றத்தின் அனுமதியை அவர்கள் நாடி உள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.