தமிழகத்தில் ஐந்து முனைப் போட்டி: ராமதாசுடன் கைகோத்த சசிகலா

தமிழகத்தில் ஐந்து முனைப் போட்டி: ராமதாசுடன் கைகோத்த சசிகலா

2 mins read
0b555c13-ceef-447b-9a1a-1e1bfea2aa27
கூட்டணி குறித்த தகவலை அதிகாரபூர்வமாக மார்ச் 20ஆம் தேதி அறிவித்த ராமதாஸ், சசிகலா. - படம்: டிடி தமிழ் செய்திகள்

திண்டிவனம்: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், புதியக் கூட்டணி ஒன்று உருவாகியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாசுடன் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா கைகோத்துள்ளார்.

அவர்களின் கூட்டணி குறித்த தகவல் அதிகாரபூர்வமாக மார்ச் 20ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

அன்றைய மாலை திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாசை, சசிகலா நேரில் சந்தித்துப் பேசினார். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நீடித்த அந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, இருவரும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது, சசிகலா அண்மையில் தொடங்கியுள்ள அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம், டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பாமக அணி ஆகியவை இணைந்து இந்தத் தேர்தலில் களம் காண்பதாக அவர்கள் அறிவித்தனர்.

தமிழகம், புதுச்சேரியில் உள்ள அனைத்து 234 தொகுதிகளிலும் அந்தக் கூட்டணி வேட்பாளர்களை நிறுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சுயமரியாதையைக் காக்கவும், துரோக சக்திகளை வீழ்த்தவும் இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் தெரிவித்தார்.

மேலும், இந்தக் கூட்டணியில் இணைய விரும்பும் ஒத்த கருத்துடைய கட்சிகளுக்காகவும் அதன் தலைவர்களுக்காகவும் தாங்கள் கதவுகளைத் திறந்து வைத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

சசிகலா - ராமதாஸ் கூட்டணி அறிவிப்பு ஒருபுறம் பரபரப்பை ஏற்படுத்தினாலும், பாமகவில் ஏற்பட்டுள்ள தந்தை-மகன் பிளவை இது வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

டாக்டர் ராமதாசின் மகன் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான மற்றொரு அணி, அதிமுக, பாஜக உள்ளடக்கிய என்டிஏ கூட்டணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தனது மகனின் முடிவிற்கு மாறாக, டாக்டர் ராமதாஸ் சசிகலாவுடன் கைகோத்திருப்பது பாமக தொண்டர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்