சிறுமியரை பாலியல் வன்கொடுமை செய்த ஆடவருக்கு ஐந்து மரண தண்டனை

சிறுமியரை பாலியல் வன்கொடுமை செய்த ஆடவருக்கு ஐந்து மரண தண்டனை

2 mins read
07f2844f-5237-46b6-868e-1750d99248ee
குற்றத்தை அம்பலப்படுத்திய சிறுமியருக்கு நீதிபதி பாராட்டு தெரிவித்தார். - சித்திரிப்புப் படம்: த நியூஸ் மினியூட்

சிவகங்கை: வயதுகுறைந்த சிறுமியரைப் பாலியல் வன்கொடுமை செய்த 49 வயது ஆடவருக்கு ஐந்து மரண தண்டனை, நான்கு ஆயுள் தண்டனை, 22 ஆண்டு கடுங்காவல் தண்டனை ஆகியன விதிக்கப்பட்டுள்ளன.

வயது குறைந்த சிறுமிகளைப் பாலியல் வதை செய்த குற்றத்துக்கு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டுள்ள அதிகபட்சத் தண்டனையாகவும் வரலாற்றில் இடம்பெறும் தண்டனையாகவும் இது கருதப்படுகிறது.

கூலித்தொழிலாளியான எம். சந்திரன் என்பவருக்குச் சிவகங்கையிலுள்ள ‘போக்சோ’ சிறப்பு நீதிமன்றம் அந்தத் தண்டனைகளை விதித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகிலுள்ள மருதிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்திரனுக்குத் திருமணமாகி மனைவி, மகன் உள்ளனர். தமது பகுதியில் பத்து வயதுக்குட்பட்ட சிறுமியரை தின்பண்டங்கள் வாங்கித் தருவதாக ஆசைகாட்டி வீட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் அவர்.

கடந்த 2023ஆம் ஆண்டு அவர் பல மாதங்களாக அந்தக் குற்றத்தைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தார். கைப்பேசியில் காணொளி விளையாட்டு சொல்லித் தருவதாகக் கூறியும் சில சிறுமியரை அவர் சீரழித்தது விசாரணையில் தெரியவந்தது.

ஆபாசக் காணொளியைக் காட்டி பாலியல் வன்கொடுமையில் அந்த ஆடவர் ஈடுபட்டதை, பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் தமது பெற்றோரிடம் கூறியதைத் தொடர்ந்து குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. அந்தச் சிறுமியின் தந்தை 2024 பிப்ரவரியில் காவல்துறையிடம் புகார் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து, 2024 பிப்ரவரி 4ஆம் தேதி திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் சந்திரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிப்ரவரி 13ஆம் தேி அவரைக் கைது செய்த காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கின் விசாரணை முடிவுற்ற நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்ப்பட்டது.

ஐந்து சிறுமியரை பாலியல் வன்கொடுமை செய்தது நிரூபிக்கப்பட்டதால் ஒவ்வொரு குற்றத்துக்கும் ஒரு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் நான்கு குற்றங்களுக்கு ஆயுள் தண்டனையும் கூடுதலாக 22 ஆண்டு கடுங்காவல் தண்டனையுடன் ரூ.11,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட ஐந்து சிறுமியரின் குடும்பங்களுக்கு தலா ரூ.7 லட்சம் வீதம் மொத்தம் ரூ.35 லட்சம் இழப்பீட்டை அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி கோகுல் முருகன் உத்தரவிட்டுள்ளார்.

சிறுமியர் பாதிக்கப்பட்டதைத் துணிச்சலுடன் பொதுவெளியில் கொண்டு வந்ததற்காக புகார் அளித்த தந்தையையும் சாட்சி சொன்ன சிறுமியரையும் நீதிபதி பாராட்டினார்.

குறிப்புச் சொற்கள்