ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதியது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட ஐவர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜேஷ் (33) - பாண்டிச் செல்வி (28) தம்பதியர். இவர்கள் தங்களது குழந்தைகளாக தர்ஷினா ராணி (8), பிரணவிகா (4) மற்றும் பிறந்து 12 நாட்களேயான ஆண் குழந்தை ஆகியோருடன் தங்கச்சிமடத்தில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் ஆண் குழந்தைக்கு உடல்நிலை குன்றியதால் ராஜேஷ், தனது குடும்பத்துடன் பாண்டிச் செல்வியின் உறவினர்களான செந்தில் மனோகரன் (70), அங்காளேஸ்வரி (58) ஆகியோரை அழைத்துக் கொண்டு ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். குழந்தைக்கு உடல்நிலை சீரானப் பிறகு அனைவரும் வாடகை காரில் செப்டம்பர் 7ஆம் தேதி (சனிக்கிழமை) ஊர் திரும்பியுள்ளனர்.
அன்று நள்ளிரவு அந்த கார் உச்சிப்புளி அடுத்த பிரப்பன்வலசை அருகே வந்த போது, காருக்கு முன்னால் திருப்பத்தூரில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், ராஜேஷ், அவரது மகள்களான தர்ஷினா ராணி, பிரணவிகா மற்றும் அவரது உறவினர்கள் செந்தில் மனோகரன், அங்காளேஸ்வரி ஆகிய ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கார் ஓட்டுனர் சவரி பிரிட்டோ (35), பாண்டிச்செல்வி மற்றும் அவரது 12 நாள் கைக்குழந்தை ஆகிய மூவரும் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உச்சிப்புளி காவல்துறை, ஐந்து பேரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.

