கிளிமஞ்சாரோ சிகரம் ஏறிச் சாதித்த ஐந்து வயது தமிழ்ச் சிறுவன்

1 mins read
73859ae3-bc06-4630-8d75-88e43d932374
சிறுவன் சிவவிஷ்ணு. - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த சிவவிஷ்ணு என்ற ஐந்து வயதுச் சிறுவன் கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறிச் சாதனை படைத்துள்ளான்.

தான்சானியா நாட்டில் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இந்தச் சிகரம் எரிமலை வகையைச் சேர்ந்தது.

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள ஆக உயர்ந்த மலையாகும்.

கடல் மட்டத்தில் இருந்து 19,340 அடி உயரம் உள்ள இந்த மலையில் ஏற உரிய பயிற்சியும் உடற்தகுதியும் அவசியம். கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறுவது எளிதானது என ஒரு தரப்பால் கூறப்பட்டாலும், அதிக உயரம், குறைந்த வெப்பம் காரணமாக இந்த மலையேற்றம் ஆபத்தானதாகவும் மாறக்கூடும் என்கிறார்கள்.

மலையேறும் பலர் மூச்சுத்திணறல், உடல் வெப்பம் அதிகரித்தல் ஆகிய சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

இதனால் நல்ல உடற்தகுதி கொண்டவர்கள்தான் ‘உகுரு’ எனக் குறிப்பிடப்படும் கொடுமுடியை அடைகிறார்கள்.

இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த சிறுவன் சிவவிஷ்ணு உள்ளிட்ட பத்துப் பேர் தங்கள் பெற்றோருடன் சேர்ந்து இந்தச் சிகரத்தில் ஏறிச் சாதனை படைத்தது தெரியவந்துள்ளது.

உலகின் ஆகப்பெரிய எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிச் சாதனை படைத்த தமிழ்ப் பெண் முத்தமிழ் செல்வி. இவரது தலைமையில்தான் சிவவிஷ்ணு உள்ளிட்ட பத்துப் பேரும் கிளிமஞ்சாரோ சிகரம் ஏறிச் சாதனை படைத்துள்ளனர்.

இவர்களில் எட்டுப் பேர் சிகரத்தின் உச்சியை அடைந்தனர். மற்ற இருவரும் 4,720 மீட்டர் உயரத்தைச் சென்றடைந்தனர்.

உலக அளவில் கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறிச் சாதனை படைத்தவர்கள் பட்டியலில், மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார் சிவவிஷ்ணு.

குறிப்புச் சொற்கள்