சென்னை: இண்டிகோ விமானம் ஒன்று சனிக்கிழமை (அக்டோபர் 26) சென்னையில் தரையிறங்கியதும் மீண்டும் வானை நோக்கிப் பறக்கத் தொடங்கியதால் அதில் இருந்த 160 பயணிகளும் அச்சத்தில் குழம்பினர்.
ஜெய்ப்பூரிலிருந்து வந்த அந்த 6E265 விமானம் தரையிறங்கியபோது எதிர்காற்று பலமாக வீசியதால் ஓடுபாதையின் தொடக்கத்தில் அதன் சக்கரங்களை இறக்க இயலவில்லை.
அதனால், மிதந்த நிலையிலேயே சென்ற அந்த விமானம் ஓடுபாதையின் நடுப்பகுதியில் தரையைத் தொட முயன்றபோது, அந்தப் பாதையின் நீளம் குறைவாக இருப்பதை விமானி உணர்ந்தார். அதனால், சற்றும் தாமதிக்காமல் விமானத்தை மேல் நோக்கிப் பறக்கச் செய்தார்.
சென்னை விமான நிலைய அதிகாரிகள் இவ்வாறு விளக்கினர்.
பிற்பகல் 1.05 மணிக்கு சென்னை வந்து சேரவேண்டிய அந்த விமானம், சனிக்கிழமை சற்று முன்னதாக 12.45 மணிக்கு வந்து தரையிறங்க முயன்றது.
மீண்டும் பறந்துசென்று சிறிது நேரம் வானத்தை வட்டமிட்ட பின்னர் 12.58 மணிக்கு அது பத்திரமாகத் தரையிறங்கியது.
அந்தச் சம்பவத்தால் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.