தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப்பாயி காலமானார்

1 mins read
9e5d81f9-f58b-403c-b0f3-78b82f28f067
கொல்லங்குடி கருப்பாயி. - படம்: ஊடகம்

சென்னை: புகழ்பெற்ற நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி காலமானார். அவருக்கு வயது 99.

சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடியில் பிறந்த கருப்பாயி, கிராமியப் பாடல்களைப் பாடி அந்த வட்டாரத்தில் பிரபலமாக இருந்தார். பின்னாள்களில் கருப்பாயி என்ற பெயருடன் ஊர்ப்பெயரும் சேர்ந்துகொண்டது.

தமிழ் திரைப்பட இயக்குநர் பாண்டியராஜனுக்கு இவரைப் பற்றி தெரியவந்ததும், தனது ‘ஆண்பாவம்’ படத்தின் மூலம் கொல்லங்குடி கருப்பாயியை நடிகையாக அறிமுகம் செய்தார்.

பின்னர், பல படங்களில் நடித்த இவர், கடைசியாக நடித்த படம் சசிகுமாரின் ‘காரி’ படமாம்.

முதுமை காரணமாக, திரையுலகை விட்டு விலகிய கொல்லங்குடி கருப்பாயிக்கு தமிழக அரசு கலைமாமணி விருது கொடுத்து கௌரவித்தது.

முதுமை அடைந்த நிலையில், தமிழக அரசு சார்பாக ஏதாவது உதவி வேண்டுமா என்று அன்றைய முதல்வர் ஜெயலலிதா கேட்டபோது கொல்லங்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பட்டா வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார் கருப்பாயி. அதை ஏற்று, உடனடியாக பட்டா வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஜூன் 14ஆம் தேதியன்று, காலை 8 மணியளவில் கொல்லங்குடி கருப்பாயி காலமானார்.

குறிப்புச் சொற்கள்