உணவுப்பொருள் கடத்தல்: தமிழ்நாடு முழுவதும் 9,500 பேர் கைது

1 mins read
b3f35278-348d-4939-8b3d-f37fd9d7c0e6
தமிழக அரசின் உணவுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பேரூராட்சிப் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளில் புதன்கிழமை (நவம்பர் 6) ஆய்வு மேற்கொண்டார்.  - படம்: தமிழக ஊடகம்

மாமல்லபுரம்: தமிழ்நாடு முழுவதும் உணவுப்பொருள் கடத்தல் தொடர்பாக 9,500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 28,802 குவின்டால் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசின் உணவுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் புதன்கிழமை (நவம்பர் 6) ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

“தமிழகம் முழுவதும் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் பணிகள் காரணமாக நியாய விலைக் கடைகளுக்குப் பொருள்கள் விநியோகம் செய்வது தாமதமானது.

“தற்போது, அனைத்துப் பகுதியிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளதால், நியாய விலைக் கடைகளில் பொருள்களுக்கு தட்டுப்பாடு இல்லை.

“அரிசிக் கடத்தலைத் தடுப்பதற்கு காவல்துறை தலைமை அதிகாரி (டிஜிபி) சீமா அகர்வால் தலைமையில் 500 பேர் கொண்ட குழுவினர் பணியில் உள்ளனர்.

“அந்தக் குழுவின் நடவடிக்கை காரணமாக கேரள மாநிலத்தின் 13 எல்லையோர மாவட்டங்கள், ஆந்திர மாநில எல்லைப் பகுதி மற்றும் திருவள்ளூர் மாவட்ட எல்லைப் பகுதிகளில் அரிசிக் கடத்தலைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

“தமிழ்நாடு முழுவதும் உணவுப் பொருள் கடத்தல் தொடர்பாக இதுவரை 9,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 9,543 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 28,802 குவின்டால் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

“கைதானவர்களில் 72 பேர்மீது பிணையில் வெளிவரமுடியாத வகையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன,” என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்