திருச்சி: விமானப் பயணிகளிடமிருந்து வெளிநாட்டுப் பணத்தாள்கள் பறிமுதல்

திருச்சி: விமானப் பயணிகளிடமிருந்து வெளிநாட்டுப் பணத்தாள்கள் பறிமுதல்

1 mins read
819568b6-80d3-4f2d-86cf-3aa709c08b13
திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் அதிக அளவில் வெளிநாட்டுப் பணத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. - கோப்புப்படம்: தமிழக ஊடகம்

திருச்சி: திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளிநாடு செல்லவிருந்த இரு பயணிகளிடமிருந்து பல லட்ச ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுப் பணத்தாள்களச் சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்குச் சென்ற ஏர் ஏஷியா விமானப் பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகளும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரும் சோதனை செய்தனர்.

அப்போது, ஒரு பெண் பயணியின் பயணப்பையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பொட்டலம் ஒன்று இருந்தது. மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் அப்பொட்டலத்தைச் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

சுங்கத்துறை அதிகாரிகள் அதனைச் சோதனை செய்தபோது அதில் 8,000 அமெரிக்க டாலர் (ரூ.563,000) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதற்கான உரிய ஆவணங்களை அப்பெண் வைத்திருக்கவில்லை என்பதால், அவரிடமிருந்த அமெரிக்க டாலரை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அத்துடன், அப்பெண் பயணியைக் கைதுசெய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல், சிங்கப்பூருக்குச் சென்ற ஸ்கூட் விமானப் பயணிகளின் உடைமைகளைச் சோதனை செய்தபோது, பயணி ஒருவரிடமிருந்து ரூ.10.33 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலரும் யூரோவும் பறிமுதல் செய்யப்பட்டது.

அவரையும் கைதுசெய்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்