தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை: சிபிஎம் கண்டனம்

தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை: சிபிஎம் கண்டனம்

படம்: தினமணி

07 Oct 2026 - 6:02 pm

1 mins read

சென்னை: தமிழ்நாட்டில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகத்தைச் சென்னை வேளச்சேரி பகுதியில் நிறுவ மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன.

இதுகுறித்து தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள அவர், அரசுக் கலைக் கல்லூரிகளில் ஏறக்குறைய 7,198 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அடித்தட்டு, நடுத்தர மாணவர்களின் உயர்கல்வித் தரம் வீழ்ச்சியடையும் அபாயம் உருவாகியுள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும், அப்பல்கலைக்கழகத்தின் இணையத்தள விவரங்களின்படி, முதல் ஆண்டு கல்விக் கட்டணமாக எம்பிஏ படிப்புக்கு ரூ.23.10 லட்சமும் செயற்கை நுண்ணறிவுப் படிப்புக்கு ரூ.17.93 லட்சமும் வணிக மேலாண்மை, தரவு அறிவியல் படிப்புகளுக்கு ரூ.14.52 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் கட்டண அமைப்பில் தலையிட மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதால், இது வரம்பற்ற கட்டணக் கொள்ளைக்கே வழிவகுக்கும் என்றும் கல்வி உரிமை, சமூக நீதி, இறையாண்மை மீதான இத்தாக்குதலை உணர்ந்து இந்த அனுமதியை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் சிபிஎம் மாநிலச் செயற்குழு வலியுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கண்டனம்வெளிநாடுபல்கலைக்கழகம்ஆஸ்திரேலியாபேராசிரியர்மாணவர்கள்கல்லூரிஇறையாண்மை