ஊடுருவும் வெளிநாட்டவர்கள்: திருப்பூரில் தீவிர கண்காணிப்பு

2 mins read
7e975594-5fba-4ee3-bc6c-eb7ada3449fd
திருப்பூரில் ஏற்கெனவே வடமாநிலத் தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை பார்க்கின்றனர். - படம்: ஊடகம்

திருப்பூர்: இந்தியாவுக்குள் வெளிநாட்டவர்கள் ஊடுருவும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஊடுருவல் தமிழகம் வரை நீண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, தமிழகத்தின் திருப்பூர் பகுதியில் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டவர்கள் ஊடுருவுவதாக தெரியவந்துள்ளது.

பங்ளாதேஷில் அண்மையில் வெடித்த கலவரம் காரணமாக அந்நாட்டின் முதன்மைத் தொழில்களில் ஒன்றான ஜவுளி உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அங்கு ஏராளமானோர் வேலை வாய்ப்புகளை இழந்ததால் அண்டை நாடான இந்தியாவுக்கு வருகின்றனர். ஜவுளி உற்பத்தியில் பங்ளாதேஷுக்குப் போட்டியாகத் திகழும் திருப்பூர் பகுதிதான் ஊடுருவிகளின் முதன்மை இலக்காக உள்ளது.

இதையடுத்து திருப்பூர் பகுதி, காவல்துறையின் தீவிர கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் திருப்பூரில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையின்போது அங்கு சட்டவிரோதமாகத் தங்கி வேலை பார்த்து வந்து பங்ளாதேஷ் குடிமக்கள் பலர் பிடிபட்டனர்.

அவர்களில் பலரிடம் ஆதார் அடையாள அட்டை உள்ளிட்ட பல போலி ஆவணங்கள் இருப்பது தெரியவந்தது. இவற்றை ஏற்பாடு செய்த முகவர் ஒருவர் பிடிபட்டார்.

அவர் கடந்த 13 ஆண்டுகளாக மேற்குவங்கத்தில் உள்ள சட்டவிரோத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்து வந்ததும், அசாம் காவல் துறையால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் காவல் துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையின் போது திருப்பூரைச் சேர்ந்த தொழில் அதிபர்கள் சிலரே பணம் கொடுத்து முகவர்கள் மூலம் பங்ளாதேஷில் இருந்து குறைந்த ஊதியத்திற்கு தொழிலாளர்களை வரவழைப்பதும் அம்பலமாகி உள்ளது.

ஏற்கெனவே நைஜீரியா, உகாண்டா நாடுகளைச் சேர்ந்த பலர் தமிழகத்துக்குள் போதைப் பொருளைக் கடத்தி வந்து பிடிபடுகிறார்கள். இந்நிலையில் பங்ளாதேஷ், மியன்மார் போன்ற நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் வருபவர்கள் தமிழகம் வரை வந்து போலி ஆவணங்களுடன் தங்கி வேலை பார்ப்பது காவல்துறைக்கு புது தலைவலியாக உருவெடுத்துள்ளது.

தலைநகர் டெல்லியில் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக அண்மையில் ஒரு தகவல் வெளியானது.

இதையடுத்து தமிழகத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

குறிப்புச் சொற்கள்