நெல்லை: முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் கொலை வழக்கில் பள்ளி மாணவர் ஒருவரும் கைதாகி உள்ளார்.
அவர் ஜாகிர் உசேன் குறித்து கொலையாளிகளுக்குத் தகவல் கொடுத்தது தெரியவந்துள்ளது.
நெல்லையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாக இருந்தவர்.
நிலத்தகராறு காரணமாக அவர் அண்மையில் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடன் தகராறில் ஈடுபட்ட கிருஷ்ணமூர்த்தி என்கிற தவுபீக், கார்த்திக் உள்ளிட்ட மூன்று பேர் கைதாகினர்.
சம்பவத்தன்று பள்ளிவாசலில் இருந்து புறப்பட்டபோது ஜாகிர் உசேன் வெட்டிக்கொல்லப்பட்டார்.
விசாரணையில் பள்ளி மாணவர் ஒருவர் இப்படுகொலைக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. அச்சிறுவன் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
பள்ளி வாசலில் இருந்து ஜாகிர் உசேன் புறப்படுவதை கொலையாளிகளுக்கு கைப்பேசி மூலமாக இந்த மாணவர்தான் தெரிவித்தார் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்த மாணவர் கைது செய்யப்பட்டு, சீர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார்.